எவெரெஸ்டில் பனிப்புயலில் சிக்கி 6 ஷெர்பாக்கள் மரணம்

படத்தின் காப்புரிமை AFP
Image caption பனிப்புயலில் சிக்கி 6 பேர் மரணம் ( எவெரெஸ்ட் சிகரத்தை எட்டும் முயற்சியைக் காட்டும் ஆவணப்படம்)

எவெரெஸ்ட் சிகரத்தை நோக்கிச் செல்லும் இமயமலைப் பாதையில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென்று வீசிய பனிப்புயலில் சிக்கி குறைந்தது ஆறு உள்ளூர் வழிகாட்டிகள் (ஷெர்பாக்கள்) இறந்தனர் என்று நேபாள அதிகாரிகள் கூறுகின்றார்.

எவெரெஸ்ட் சிகரத்தின் மீது ஏற முயலும் மலையேறிகள் அங்கு செல்வதற்கு முன் புறப்படும், சுமார் 5,800 மீட்டர் உயரத்தில் இருக்கும் எவரெஸ்ட் கீழ்மட்ட முகாம் என்ற இடத்தில் இருந்து சற்று மேலே இந்த பனிப்புயல் தாக்கியதாக ஒரு அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.

இது வரை நான்கு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் இருவரின் உடல்களை பனிப்புதைவுகளிலிருந்து தோண்டியெடுக்கும் பணி நடந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த ஷெர்பா வழிகாட்டிகள் இன்று அதிகாலை , அவர்களுக்கு பின் வரவிருந்த மலையேறிகளுக்கு கயிறுகளைக் கட்டி பாதைகளை சீர்படுத்த, முன்னதாகவே அங்கு சென்றிருந்த போது இந்த பனிப்புயல் தாக்கியது என்று அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஏ.பி செய்தி நிறுவனம் கூறுகிறது.

8,850 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இந்த எவெரெஸ்ட் சிகரத்தின் ஏறும் முயற்சிகளுக்கு உகந்த கால நிலை நிலவும் பருவம் இது என்பதால், இப்போது அப்பகுதியில் மலெயேறிகள் அதிகம் பேர் வந்திருக்கின்றனர்.

இந்தப் பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக மூன்று ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்று நேபாள சுற்றுலாத்துறை அதிகாரி மதுசூதன் பர்லாகோட்டி பிபிசியிடம் தெரிவித்தார்.

எட்மண்ட் ஹிலாரியும், டென்ஸிங் நோர்கேயும்,உலகிலேயே மிக உயரமான எவெரெஸ்ட் சிகரத்தின் மீது 1953ல் ஏறியதிலிருந்து 3,000க்கும் மேற்பட்டோர் இந்த சிகரத்தை எட்டியிருக்கின்றனர். ஆனால் இந்த முயற்சியில் பலர் உயிரிழந்தும் இருக்கின்றனர்.