ஆயுததாரிகள் விடுவித்த செய்தியாளர்கள் பிரான்ஸ் திரும்பினர்

படத்தின் காப்புரிமை AFP
Image caption 'செய்தியாளர்களின் விடுதலை பிரான்ஸின் பெருமை'

சிரியாவில் சுமார் ஓராண்டு காலம் இஸ்லாமிய ஆயுததாரிகளால் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் தாய் நாட்டுக்குத் திரும்பியுள்ள பிரான்ஸ் ஊடகவியலாளர்கள் நால்வரை அதிபர் ஃபிரான்ஸுவா ஒலாந்த் நேரில் சென்று வரவேற்றுள்ளார்.

பாரிஸுக்கு அருகில் உள்ள விமானப் படைத்தளம் ஒன்றில் ஊடகவியலாளர்களை வரவேற்று அதிபர் ஒலாந்த் பேசினார்.

அவர்களின் வருகை பிரான்ஸுக்கு மகிழ்ச்சிக்குரிய, பெருமைக்குரிய தருணம் என்று அதிபர் கூறினார்.

இஸ்லாமிய கெரில்லா கிளர்ச்சிக் குழுவினரால் கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கும் மேலாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இவர்கள் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் காணப்படுகின்றனர்.

சிரியா- துருக்கி எல்லைக்கு அருகே, கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் இந்த ஊடகவியலாளர்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.