உலகின் இரண்டு முன்னணி மருந்து நிறுவனங்களிடையே உடன்பாடு

படத்தின் காப்புரிமை Reuters

உலகின் இரண்டு முன்னணி மருந்து தயாரிப்பு பெருநிறுவனங்களான நோவார்டிஸும் கிளாக்ஸோ ஸ்மித்க்ளைனும் ஒன்றின் தொழில் பிரிவை மற்றொன்று வாங்கும் விதமாக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.

இந்த உடன்பாடு பல பில்லியன் டாலர்கள் அளவுக்கானவை.

ஸ்விஸ் நிறுவனமான நோவார்ட்டிஸின் நோய் எதிர்ப்பு மருந்து தயாரிக்கும் பிரிவை பிரிட்டிஷ் நிறுவனமான கிளாக்ஸோ ஸ்மித்க்ளைன் ஏழு பில்லியன் டாலர்களுக்கு வாங்கியுள்ளது.

அதேவேளை ஜிஎஸ்கே தனது புற்றுநோய்க்கான மருந்து தயாரிக்கும் பிரிவை நோவார்டிஸிடம் 16 பில்லியன் டாலர்களுக்கு விற்றுள்ளது.

படத்தின் காப்புரிமை PA

இதனிடையே இந்த இரண்டு நிறுவனங்களும் வேறு சில வர்த்தகத்தை கூட்டாக முன்னெடுக்கவும் முடிவு செய்துள்ளன.

அந்த உடன்பாட்டின்படி மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமலேயே மருந்துக் கடைகளில் வாங்கக் கூடிய மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை கூட்டாக தயாரித்து விற்பார்கள்.

தம்மிடையே ஏற்பட்டுள்ள உடன்பாடு மற்றும் வர்த்தப் பரிமாற்றம் மூலம் இரண்டு நிறுவனங்களும் அதன் பங்குதாரர்களும் பயனடைவார்கள் என கிளாக்ஸோவும் நோவார்ட்டிஸும் அறிவித்துள்ளன.

மற்றொரு ஒப்பந்தத்தின் மூலம் நோவார்ட்டிஸ் நிறுவனம் தனது கால்நடை மருந்துப் பிரிவை லில்லி நிறுவனத்துக்கு 5.4 பில்லியன் டாலருக்கு விற்க உடன்பட்டுள்ளது.