ஷெர்பாக்கள் பணிப்புறக்கணிப்பு . அடிவார முகாமில் பேச்சுவார்த்தை

படத்தின் காப்புரிமை AFP
Image caption எவெரெஸ்ட் அடிவார முகாமில் பேச்சுவார்த்தை

எவெரெஸ்ட் சிகரத்தை நோக்கிய மலைப் பாதையில், கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் 16 நேபாள ஷெர்பாக்கள் ( மலையேறிகளுக்கு வழிகாட்டுபவர்கள்) கொல்லப்பட்டதை அடுத்து, இனி மலையேறிகளுக்கு வழிகாட்டுவதைத் தொடரவேண்டுமா என்பது குறித்து முடிவு செய்ய, ஷெர்பாக்கள் எவெரெஸ்ட் செல்லும் பாதையில் இருக்கும் அடிவார தளத்தில் , சர்வதேச மலையேறிகளை சந்திக்கிறார்கள்.

வெளிநாடுகளிலிருந்து வந்து மலையேறுபவர்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் தங்களுக்கு கூடுதல் பங்கு தரவேண்டும், இறந்த ஷெர்பாக்களின் குடும்பங்களுக்குக் கூடுதல் இழப்பீடு தரவேண்டும் என்று ஷெர்பாக்கள் கோரிவருகிறார்கள். இந்தக் கோரிக்கைகளுக்கு நேபாள அரசு இணங்கும் வரை, தாங்கள் மலையேறுவதைப் புறக்கணிக்கப்போவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.

பெரும்பாலான மலையேறும் குழுக்கள் இந்தப் பிரச்சினை காரணமாக அடிவார தளத்திலேயே காத்துக்கொண்டிருக்கின்றனர்.

நேபாள சுற்றுலா அமைச்சரும் வியாழனன்று இந்த இடத்துக்கு சென்று ஷெர்பாக்களைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷெர்பாக்களின் குறைகளை நேபாள அரசு தீர்க்க மேலும் உறுதிமொழிகள் தரப்படவேண்டும் என்று கோரும் ஒன்பது சர்வதேச மலையேறும் குழுக்களின் தலைவர்கள், ஷெர்பாக்களின் புறக்கணிப்பு, நாட்டின் மலையேறும் தொழிலுக்கும், சுற்றுலாத்துறைக்கும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள்.