பிபிசி தமிழ்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"ஒபாமா மலேசியாவில் எதிர்கட்சிகளை சந்திக்காதது ஏமாற்றம் தருகிறது"

படத்தின் காப்புரிமை AFP
Image caption மலேசிய மன்னருடன் அமெரிக்க அதிபர்

மலேசியாவுக்கு விஜயம் செய்த அமெரிக்க அதிபர் ஒபாமா தங்களைச் சந்திக்கவில்லை என்று எதிர்கட்சிகள் குறைகூறியுள்ளன.

அதேபோல மலேசியாவில் மனித உரிமைகள் தொடர்பான அரசின் நிலைப்பாட்டை ஒபாமா ஆதரித்துள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

எந்தவொரு நாட்டுக்கு அமெரிக்க அதிபர் சென்றாலும், அரச தரப்பினரை சந்திக்கும் அதேவேளை எதிர்கட்சியினரையும் சந்தித்து பேசுவது மரபு என்றும், ஆனால் மலேசியாவில் அது கடைபிடிக்கப்படவில்லை என்று ஒரு எதிர்கட்சியான ஜனநாயக செயல்கட்சியின் துணைத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம் குலசேகரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

தமது நாட்டில் எதிர்கட்சி உறுப்பினர்களை அமெரிக்க அதிபர் ஒபாமா சந்திக்காதது தங்களுக்கு வருத்தமும், அதிர்ச்சியையும் அளிக்கிறது என்று அவர் கூறுகிறார்.

அவரது வருகைகூட எதிர்கட்சிகளுக்கு அறிவிக்கப்படவில்லை என்றும், அவர்கள் ஊடகங்களின் வாயிலாகவே இதை அறிந்துகொண்டனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

நாடாளுமன்ற வளாகத்தில் அமெரிக்க அதிபர் உறுப்பினர்களை சந்திக்கும்போது ஆளும் கட்சியினருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது எனவும் எதிர்கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் குலசேகரன் கூறுகிறார்.

ஒபாமாவை சந்திக்க நேரம் கோரி தாங்கள் கோலாலம்பூரிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திடம் நேரம் கேட்டிருந்ததாகவும், அதுவும் வழங்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் நாட்டில் நிலவும் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில், உரிய தகவல்கள் ஆவணங்கள் ஆகியவற்றை அமெரிக்க அதிபரின் பார்வைக்கு அந்நாட்டு தூதரகம் மூலமாக அனுப்பிவைக்கப்படும் எனவும் ஒரு முக்கிய எதிர்கட்சியான ஜனநாயக செயல்கட்சியின் துணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம் குலசேகரன் கூறுகிறார்.