கென்யாவில் பலதாரத் திருமணத்துக்கு சட்டரீதியான அங்கீகாரம்

கென்யாவில் ஆடவர்கள் எத்தனைப் பெண்களை வேண்டுமானலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்பதை சட்டமாக்கும் ஒரு புதிய மசோதாவுக்கு நாட்டின் அதிபர் உஹுரு கென்யாட்டா ஒப்புதல் வழங்கியுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption திருமணம் முடித்து முத்தத்தை பரிமாறிக் கொள்ளும் ஒரு தம்பதி

இதன்மூலம் அங்கு பலதார உறவுக்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடைக்கிறது.

பெண்கள் அமைப்பினர் மற்றும் கிறிஸ்துவத் தலைவர்களின் விமர்சனங்களையும் மீறி இந்த சட்ட மசோதாவில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

பாரம்பரிய பழக்கங்களை அங்கீகரிக்கும் வகையிலான இந்தச் சட்ட முன்வடிவுக்கு கடந்த மாதம் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து பாரம்பரிய சட்டங்களுக்கு ஒத்திசைவாக சிவில் சட்டமும் திருத்தப்பட்டுள்ளது.

எனினும் பாரம்பரியமாக அடுத்த திருமணத்துக்கு முதல் மனைவி ஒப்புதல் அளிக்க வேண்டும் எனும் வழக்கமும் அங்குள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption பழங்குடியினர் சமூகத்தில் பலதார உறவு முறை உள்ளது என்று அரசு வாதிடுகிறது

இது தொடர்பிலான விவாதம் கோபாவேசமாக நடைபெற்ற பிறகு, நாடாளுமன்றக் கூட்டத்திலிருந்து பெண் உறுப்பினர்கள் வெளியேறினர்.

இந்தப் புதிய சட்டம் குடும்பம் எனும் அமைப்பையே குலைத்துவிடும் என நாடாளுமன்றத்தில் வாதிடப்பட்டது.

அதேபோல திருமணம், குடும்பம் பற்றிய கிறிஸ்துவக் கோட்பாடுகளுக்கு இச்சட்டம் கேடு விளைவிக்கும் என பாதிரிமார் கோரியிருந்தனர்.

இந்தச் சட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தை அணுகவுள்ளதாக தேசிய பெண் வழக்கறிஞர்கள் சம்மேளனம் கூறியுள்ளது.

ஆனால் இந்தச் சட்டத்தின் மூலம் அதிகாரபூர்வமற்ற வகையில் நடக்கும் பாரம்பரிய திருமணங்கள் ஒழிக்கப்பட்டுள்ளன என்று அரசதரப்பு கூறுகிறது.

அப்படியான திருமணங்கள் பதிவு செய்யப்படுதில்லை என்றும், எந்த சட்டவழிமுறைகளும் இன்றி விவாகரத்து செய்ய முடியும் எனும் நிலை மாற்றப்பட்டுள்ளது என்றும் அரசு வாதிடுகிறது.