தெற்கு சூடானில் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டது

படத்தின் காப்புரிமை Reuters
Image caption அதிபரும் கிளர்ச்சித் தலைவரும் அமைதி ஒப்பந்த ஆவணத்தை கைமாறிக் கொண்டனர்.

தெற்கு சூடானில் அரச படைகளுக்கும் கிளர்ச்சிக் குழுவினருக்கும் இடையே நேற்று வெள்ளிக்கிழமை இரவு எட்டப்பட்டுள்ள சமாதான உடன்படிக்கையைத் தொடர்ந்து, அங்கு அவசர உதவி விநியோகம் சென்றடைய இருதரப்பும் உதவ வேண்டும் என்று ஐநா கோரிக்கை விடுத்துள்ளது.

நிவாரண வாகன தொடரணிகள் செல்வதற்கு வசதியாக, வீதிகளையும் ஆற்றுக் கடவைகளையும் திறந்துவிடுமாறு தெற்கு சூடானில் உள்ள ஐநாவின் தலைமை அதிகாரி டோபி லான்செர் இரண்டு தரப்பையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தெற்கு சூடான் அதிபர் சல்வா கீயருக்கும் ஆயுதக்குழுத் தலைவர் ரீக் மஷாருக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்பாட்டின்படி, அடுத்துவரும் மணித்தியாலங்களுக்குள் மோதல்கள் முடிவுக்கு வரவுள்ளன.

ஐந்து மாதங்களாக நடந்துவரும் மோதல்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஒரு மிலியனுக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர்.

கடந்த ஜனவரியில் எட்டப்பட்ட அமைதி ஒப்பந்தம் கைச்சாத்தான மறுகணமே முறிந்துபோனமை குறிப்பிடத்தக்கது.