துருக்கி சுரங்க விபத்தில் குறைந்தது 200 தொழிலாளர்கள் பலி

Image caption விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள்

துருக்கியில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட ஒரு விபத்தில் 200க்கும் அதிகமான சுரங்க தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

நிலப்பரப்பிற்கு அடியில் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு மின்சார அலகில் ஏற்பட்ட வெடிப்பு, அங்கிருந்த மின்சார விநியோகத்தையும் காற்றோட்ட அமைப்புகளையும் செயலிழக்கும் வகையில் பாதித்துள்ளது.

இதனால் வெளிவந்த கார்பன் மோனாக்சைடு நச்சு காற்றை சுவாசித்ததால் அந்த தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இன்னும் அந்தச் சுரங்கத்தில் சிக்கியிருக்கும் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகளை,பாதுகாப்புக் கவலைகள் காரணமாக, மீட்புப் பணியாளர்கள் இடை நிறுத்தியிருக்கின்றனர்.

உயிர் பிழைத்தவர்களை கண்டுபிடிக்கும் நம்பிக்கை மங்கி வருவதாக அந்நாட்டின் எரிசக்தி துறை அமைச்சர் டானெர் யில்டிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த சுரங்கம் அமைந்திருக்கும் துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள சோமா என்ற இடத்திற்கு பயணம் செய்வதற்காக தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துள்ளார் துருக்கிய பிரதமர், ரிஜப் தயிப் எர்டோகன். நாட்டில் இந்த விபத்தில் கொல்லப்பட்ட தொழிலாளர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.