தென்கொரிய படகு விபத்து: கடலோரக் காவல்படையின் பொறுப்புகளில் மாற்றம்

தொலைக்காட்சி உரையாற்றும் தென்கொரிய அதிபர் படத்தின் காப்புரிமை AP
Image caption தொலைக்காட்சி உரையாற்றும் தென்கொரிய அதிபர்

தென்கொரியாவில் சென்ற மாதம் கப்பல் ஒன்று கடலில் கவிழ்ந்த நேரத்தில், அந்நாட்டின் கடலோரக் காவல்படையினர் போதிய நடவடிக்கைகளை எடுத்திருக்காத காரணத்தினால், அந்த எல்லைப் படையை சில பொறுப்புகளில் இருந்து விடுவிப்பதாக அமைகின்ற திட்டங்களை அதிபர் பாக் கன்ஹெய் அறிவித்துள்ளார்.

குனிந்து தலைவணங்கி தொலைக்காட்சி உரையை ஆரம்பித்த அதிபர் கன்ஹெய், நிறைவாக விபத்தில் உயிரிழந்தவர்கள் சிலரின் பெயர்களை கண்ணீர் மல்க வாசித்தார்.

இந்த விபத்து பற்றி தெரியவந்த ஆரம்ப கட்டத்தில் கடலோரக் காவல்படையின் நடவடிக்கைகள் மோசமாக இருந்தன என்று அதிபர் தெரிவித்தார்.

கடலோரக் காவல்படையினரிடம் இருந்துவந்த மீட்புப் பணி பொறுப்புகள் தேசிய அவசரகால பாதுகாப்பு அமைப்பு ஒன்றிடம் மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படகு விபத்தின் விசாரணைகளையும் பொலிசார் நடத்துவர்.

கப்பல் போக்குவரத்து நிறுவனங்களுக்கும் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்புக்கும் இடையிலான உறவிலுள்ள முறைகேடுகள் மற்றும் ஊழலைக் கலையவும் பாதுகாப்புத் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிபர் வாக்குறுதி அளித்துள்ளார்.

படகு விபத்தின்போது கன்ஹெய் அரசாங்கம் கையாண்ட விதம் ஏற்கனவே பரவலான விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தது. நாட்டின் பிரதமர் ஏற்கனவே ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.