முறைகேடு செய்தமைக்காக ஆப்கானிய தேர்தல் அதிகாரிகள் ஐயாயிரம் பேர் பதவிநீக்கம்

யூசஃப் நூரிஸ்தானி படத்தின் காப்புரிமை AFP
Image caption ஆப்கானிய தேர்தல் தலைமை ஆணையர் யூசஃப் நூரிஸ்தானி

ஆப்கானிஸ்தானில் கடந்த ஏப்ரலில் நடந்த அதிபர் தேர்தலின் முதல் சுற்று வாக்குப்பதிவின்போது ஏமாற்று வேலையில் ஈடுபட்டார்கள் என்று குற்றம்சாட்டி தேர்தல் ஆணைய ஊழியர்கள் ஐயாயிரம் பேரை அவ்வாணையம் பதவிநீக்கம் செய்துள்ளது.

வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடிகளுக்கு பொறுப்பாக இருந்த அதிகாரிகளே பதவிநீக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள்.

வரும் ஜூன் 14ஆம் தேதி நடக்கவுள்ள அதிபர் தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்குப்பதிவில் பணியாற்ற பதவிநீக்கப்பட்டவர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என ஆப்கானிஸ்தானின் சுயாதீனமான தேர்தல் ஆணையத்தின் தலைவரான யூஸஃப் நூரிஸ்தானி கூறினார்.

தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள காவல்துறை மூத்த அதிகாரிகள் சிலரையும் பதவிநீக்கும்படி நாட்டின் உள்துறை அமைச்சரிடம் நூரிஸ்தானி கேட்டுக்கொண்டுள்ளார்.