ஏகாந்தமாம் இவ்வேளையில்...

Image caption தனிமையிலே........

தனிமையில் இனிமை காண முடியுமா என்று கேட்ட கவிஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் முதுமையில் தனிமை என்பது மிகவும் சலிப்பைத் தரும் விஷயமாகத்தான் இருக்கவேண்டும்.

பிரிட்டனில் பேசத் துணையில்லாமல் தனியே 'போரடித்து'க்கொண்டிருக்கும் முதியவர்களுக்கு, உதவ, அவர்களுடன் பொறுமையாகப் பேச அமைக்கப்பட்ட ஒரு உதவித் தொலைபேசி எண்ணுக்கு ( ஹெல்ப்லைன்), அது ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதத்துக்குள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட 'கால்'கள் ( தொலைபேசி அழைப்புகள்) வந்துவிட்டனவாம்.

இந்த அளவுக்கு அதிக எண்ணிக்கையில் வந்திருக்கும் அழைப்புகள் , சமகால பிரிட்டனில் பல முதியவர்கள் சந்திக்கும், அனுபவிக்கும் தனிமைப் பிரச்சினையைக் கோடிகாட்டுவதாக இந்தச் சேவையை உருவாக்கிய அமைப்பான, சில்வர்லைன் என்ற நிறுவனத்தின் நிறுவனர், எஸ்தர் ராண்ட்ஸன் கூறினார்.

இந்தச் சேவையை அழைத்து "சும்மா" பேசிக்கொண்டிருந்தவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் தனியாக வாழ்பவர்கள் , அவர்களுக்கு பேச்சுத்துணைக்கு யாரும் இல்லை என்று தெரிய வந்திருக்கிறது.

மேலும் பாதிப்பேர் தங்களுடன் பேச யாருமில்லாத நிலையிலேயே தாங்கள் அடிக்கடி பெரும்பாலான நாட்களைக் கழிப்பதாக கூறினர். இதில் பத்தில் ஒரு பங்கினர், ஒரு வாரத்துக்கும் மேல், பேச யாருமில்லாத நிலையிலேயே கழிப்பதாகக் கூறினர்.