பீட்ஸ் நிறுவனத்தை வாங்குகிறது ஆப்பிள்

Image caption பீட்ஸ் நிறுவனத்தை வாங்குகிறது ஆப்பிள்

கம்ப்யூட்டர் தொழில் நுட்ப நிறுவனமான ஆப்பிள், ஹெட்போன் தயாரிப்பு மற்றும் இணையத்தின் மூலம் இசை ஒலிபரப்பு நிறுவனமான, பீட்ஸ் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை 300 கோடி டாலர்கள் கொடுத்து வாங்கவிருப்பதாக உறுதிப்படுத்தியிருக்கிறது.

இந்த வர்த்தக நடவடிக்கை ஆப்பிள் நிறுவனத்தின் 38 ஆண்டுகால வரலாற்றில் நிகழ்ந்துள்ள பெரிய ஒப்பந்தமாக இருக்கும். இணைய இசை ஒலிபரப்பு வர்த்தகத்தில் தனக்கிருக்கும் நிலையை ஸ்திரப்படுத்தி, மேம்படுத்திக்கொள்ள ஆப்பிள் நிறுவனம் எடுக்கும் ஒரு முயற்சியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

இணைய வழி இசை ஒலிபரப்பு வர்த்தகம் , ஆப்பிள் நிறுவனம் நடத்தும் ஐ-ட்யூன்ஸ் சேவையின் ஆதிக்கத்தை பெருமளவு பாதித்திருந்தது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ ட்யூன்ஸ் வானொலி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து அந்த நிறுவனம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கவில்லை. இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம், பீட்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர்களான, ராப் இசைப் பாடகர் டாக்டர் ட்ரெ மற்றும் ஜிம்மி லொவின் ஆகிய இருவரும் ஆப்பிள் நிறுவனத்தில் சேர்வார்கள்.