"கௌரவ"க் கொலை- போலிசார் தடுக்கவில்லை என்கிறார் கணவர்

Image caption "கல்லால் அடித்துக் கொல்லப்படுவதைப் போலிசார் பார்த்துக்கொண்டிருந்தனர்" -கணவர்

பாகிஸ்தானின் லாகூர் நகரில்,குடும்பத்தினரால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட பெண்ணின் கணவர், தாக்குதல் நடந்தபோது, பார்த்துக்கொண்டிருந்த போலிசார் தாக்குதலைத் தடுக்க ஒன்றுமே செய்யவில்லை என்று கூறியிருக்கிறார்.

குடும்பத்தினரை மீறி, காதல் திருமணம் செய்து கொண்ட இந்தப் பெண் மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்தப் பிரச்சினை தொடர்பான வழக்கு விசாரணைக்காக செவ்வாய்க்கிழமை லாகூர் உயர்நீதிமன்றத்துக்கு வந்த பர்ஹானா பர்வீன் என்ற இந்தப் பெண்ணை, அவரது தந்தையும் சகோதரரர்களும் சில உறவினர்களும் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே பட்டப்பகலில் கல்லால் தாக்கிக் கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தப் பெண்ணின் கணவர் ,முகம்மது இக்பால், பிபிசிக்கு அளித்த பேட்டியில், இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்தபோது அங்கிருந்த போலிசார் பலமுறை தான் உரக்கக் கூச்சலிட்டபோதும், இந்தத் தாக்குதலைத் தடுக்காமல் , மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தனர், இது மனிதத் தன்மையற்ற அவமானகரமான செயல் என்றார்.

பாகிஸ்தானில் குடும்பத்தினர் அனுமதி இல்லாமல் பெண்கள் காதல் திருமணம் செய்து கொள்ளும்போது, அதனால் குடும்ப "கௌரவம்" பாதிக்கப்படுவதாகக் கூறி நூற்றுக்கணக்கான பெண்கள் ஒவ்வோர் ஆண்டும் கொலை செய்யப்படுகின்றனர்.

இந்த குறிப்பிட்ட சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணின் தந்தை போலிசில் சரணடைந்துள்ளார். மற்றவர்கள் இன்னும் கைதாகவில்லை.