அமெரிக்க 'ஸ்பெல்லிங்' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர்கள் இணைந்து வெற்றி

படத்தின் காப்புரிமை pa
Image caption ஸ்பெல்லிங் போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர்கள் தொடர்ந்து வெற்றி

ஆங்கிலச் சொற்களில் உள்ள எழுத்துக்களை சரியாகச் சொல்லும் அமெரிக்க தேசிய " ஸ்பெல்லிங்" போட்டியில் 50 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் முதல் முறையாக இரு மாணவர்கள் இணையாக வென்றுள்ளனர்.

இந்த இருவரும் இந்திய வம்சாவளியினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதிமூன்று வயதான அன்சுன் சுஜோ மற்றும் 14 வயதான ஸ்ரீராம் ஹத்வார் ஆகிய இரு இந்திய வம்சாவளி மாணவர்களும், இந்த தேசிய சொல்லெழுத்துப் போட்டியில் வென்றபின் கிடைத்த கோப்பையை இணைந்து உயர்த்திப் பிடித்தனர்.

இந்தப் போட்டியில் இறுதிச் சுற்றில் வந்த வேறு 10 பேரை அவர்கள் தோற்கடித்தனர்.

அவர்களுக்கு வெற்றிப் பரிசாக, இந்த கோப்பையைத் தவிர, தலா 30,000 டாலர்கள் தரப்படுகிறது.

இந்த மாணவர்களில் ஒருவர் "ஸ்டிக்கோமித்தியா" ( stichomythia) என்ற சொல்லுக்கு எழுத்துக்களை சரியாகச் சொல்ல வேண்டியிருந்தது. இந்த வார்த்தை புராதன கிரேக்க நாடகங்களிலிருந்து வரும் சொல்லாகும்.

இதே போல மற்றொரு வெற்றி பெற்ற மாணவன் "பெயிடோன் " ( feuilleton) என்ற வார்த்தைக்கு எழுத்துக்களைச் சரியாகச் சொல்லவேண்டியிருந்தது. இந்த வார்த்தை பத்திரிகைகளுடன் வரும் ஒருவித இலவச இணைப்பைக் குறிக்கும் சொல்.

கடந்த 8 ஆண்டுகளாக இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களும், கடந்த 17 ஆண்டுகளில் 13 போட்டிகளில் வென்றவர்களும் இந்திய வம்சாவளி மாணவர்களாகவே இருந்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டி கடந்த 89 ஆண்டுகளாக அமெரிக்காவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போட்டியின் வரலாற்றில் இருவர் இணைந்து வெல்வது இது நான்காவது முறையாகும்.