தியனான்மென் 25வது ஆண்டு அனுசரிப்பைத் தடுக்க சீனப் படைகள் குவிப்பு

படத்தின் காப்புரிமை
Image caption தியானான்மென் சதுக்கத்தில் ஆர்ப்பாட்ட நிகழ்வு அஞ்சலியைத் தடுக்க பாதுகாப்புப் படையினர்

சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள தியனான்மென் சதுக்கத்தில் 1989ல் நடந்த ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களை அரசு ஒடுக்கிய நிகழ்வின் 25வது ஆண்டு நிறைவு இன்று அனுசரிக்கப்படாமல் தடுக்க அந்த சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான சீனப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வை அனுசரிக்கவோ அல்லது விவாதிக்கவோ கூடாது என்று மக்கள் தடுக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்.

சதுக்கத்துக்கு வெளிநாட்டு செய்தியாளர்கள் சென்ற போது அவர்களை பாதுகாப்புப்படையினர் அந்த இடத்திலிருந்து வெளியேற்றினர்.

அந்தப் பகுதி வழியாகக் கடந்து சென்றவர்களையும் போலிசார் சோதனையிட்டு அவர்களது அடையாள அட்டைகளைப் பார்வையிட்டனர்.

சமீப வாரங்களில் பல டஜன் கணக்கான ஆர்வலர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். சமூக ஊடகங்களும் கண்காணிக்கப்பட்டன.

தியனான்மென் சதுக்கத்தில் 1989ல் நடந்த ஆர்ப்பாட்டங்கள் அரசியல் சீர்திருத்தங்களைக் கோரி நடந்தன.

ஆனால் இதை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடந்த அரசியல் அதிகாரப் போராட்டத்தில் வென்ற கடும்போக்குப் பிரிவினர், பலத்தைப் பிரயோகித்து ஒடுக்கினர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை புரட்சிக்கு எதிரான வன்முறை என்று வர்ணித்து இதில் இறந்தவர்களுக்கு நினைவஞ்சலி எதையும் அனுசரிக்க அனுமதிப்பதில்லை.

ஆனால், அருகேயுள்ள ஹாங்காங்கில், இன்று தியனான்மென் சதுக்க நிகழ்வுகள் குறித்த பேரணி ஒன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. தைவானிலும் இதே போன்ற நிகழ்வுகள் திட்டமிடப்பட்டிருக்கின்றன.