தொலைக்காட்சி பாடகர் போட்டியில் 25 வயது கன்னியாஸ்திரி வெற்றி

படத்தின் காப்புரிமை AFP
Image caption அருட்சகோதரி ஸோர் கிறிஸ்தீனா

உலகத் தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சியான த வாய்ஸ் பாடகர் போட்டியின் இத்தாலிய வடிவ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி ஒருவர் வெற்றிபெற்றுள்ளார்.

இந்தப் போட்டியில் பங்குகொண்டது முதல் அருட்சகோதரி ஸோர் கிறிஸ்தீனா இணையதளம் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றிருந்தார்.

கன்னியாஸ்திரி உடையுடன் கழுத்தில் சிலுவையுடன் ஸோர் கிறிஸ்தீனா தனது வெற்றிக்காக கடவுளுக்கு நன்றி கூறினார்.

இவர் முதன்முதலாக இந்தப் போட்டிக்குத் தெரிவாவதற்காகப் பாடிய பாடல் ( Alicia Key- இன் No One என்ற பாடல்) யூடியூப் இணையதளத்தில் ஏற்கனவே 50 மிலியன் தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது.

ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையை சாதாரண மக்களிடம் மேலும் நெருக்கமாகக் கொண்டுசெல்ல வேண்டும் என்ற பாப்பரசர் பிரான்சிஸின் வேண்டுகோளை பின்பற்றியே தான் இந்தப் போட்டியில் பங்குபற்றியதாக 25 வயதான அருட்சகோதரி கிறிஸ்தீனா கூறினார்.