'விடுவிக்கப்பட்ட அமெரிக்கச் சிப்பாயின் குடும்பத்துக்கு மிரட்டல்'

விடுவிக்கப்பட்ட அமெரிக்கச் சிப்பாயின் குடும்பத்துக்கு மிரட்டல் படத்தின் காப்புரிமை AP
Image caption விடுவிக்கப்பட்ட அமெரிக்கச் சிப்பாயின் குடும்பத்துக்கு மிரட்டல்

அண்மையில் தாலிபான்களால் விடுவிக்கப்பட்டிருந்த அமெரிக்க சிப்பாய் சார்ஜெண்ட் போ பெர்தாலின் குடும்பத்தாருக்கு எதிராக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதை விசாரித்து வருவதாக அமெரிக்க மத்திய புலனாய்வு நிறுவனமான எஃப் பி ஐ கூறுகிறது.

கியூபாவில் உள்ள குவாண்டனாமோ குடாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஆயுததாரிகள் ஐந்து பேரை அமெரிக்கா விடுவித்து, அதன் மூலம் ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்டிருந்த போவின் விடுதலையைப் பெறப்பட்டது சர்ச்சையை உருவாக்கியிருந்தது.

இதனிடையே, தாலிபான்களினால் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது தப்பிக்க முயன்றதற்கு தண்டனையாக வாரக்கணக்கில் தன்னை இருட்டறையில் அவர்கள் அடைத்து வைத்திருந்தார்கள் என போ தெரிவித்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

உடல்நல ரீதியில் அவர் வீடுதிரும்பத் தயார் என்றாலும் உணர்வு ரீதியில் அவர் இன்னும் தயாராக இல்லை என்று சம்பந்தப்பட்டவர்கள் சிலரை மேற்கோள்காட்டி அந்தச் செய்தித்தாள் குறிபிட்டுள்ளது.

ரகசிய இடத்தில் தலிபான்கள்

இதற்கிடையே, சார்ஜெண்ட் போ பெர்தாலுக்கு பதிலாக விடுவிக்கப்பட்ட ஆட்கள் அனைவரும் ரகசியமாக வைக்கப்பட்டிருப்பார்கள் என்று தலிபான் அமைப்பு கூறியுள்ளது.

அமெரிக்காவால் மிகவும் உச்சபட்ச ஆபத்தானவர்கள் என்று வகைப்படுத்தப்பட்ட அந்த 5 பேரும், உடன்பாட்டின் ஒரு பகுதியாக கட்டாருக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

டோகாவில் தாம் வைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்புடனான வளாகத்தில் இருந்து அவர்கள் வெளியே வரவில்லை. அந்த இடத்தின் தகவல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

12 வருடங்கள் சிறையில் இருந்த அவர்கள், அதுவும் பல நாட்கள் தனிமைச் சிறையில் இருந்த அவர்கள் இன்னமும் வெளியுலகுடன் பேசுவதற்கான நிலையில் இல்லை என்று அவர்களுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.