கராச்சி விமான நிலையத்தில் மீண்டும் குண்டு வெடிப்பு - காணொளி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பாகிஸ்தானின் கராச்சி சர்வதேச விமானநிலையத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.

நேற்றிரவு ( ஞாயிறு) துப்பாக்கிதாரிகள் விமானநிலையத்தைத் தாக்கியதில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் விமானநிலையத்தை பெரும்சண்டைக்குப் பிறகு மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக அதிகாரிகள் அறிவித்த பின்னர், இன்று திங்கட்கிழமை, மேலும் இரண்டு குண்டு வெடிப்பு சப்தங்கள் கேட்டன.

இந்த சம்பவத்தை அடுத்து பாதுகாப்புப் படையினர் மேலும் குவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில், தாக்குதலை நடத்திய 10 பேரும் அடங்குவர். நேற்றிரவு சுமார் ஐந்து மணி நேரங்கள் நீடித்த இந்தத் தாக்குதலில் குறைந்தது 14 பேர் காயமடைந்தனர்.

பலத்த ஆயுதங்கள் தாங்கிய துப்பாக்கிதாரிகள் விமானநிலையத்தின் சரக்கு முனையகத்தின் வழியாகவும், தனியார் விமான முனையகத்தின் வழியாகவும் புகுந்து கையெறிகுண்டுகளையும் , தானியங்கித் துப்பாக்கிகளையும் பயன்படுத்தித் தாக்கினர்.

விமான நிலையத்தில் இருந்த சரக்குப் பொதிகளுக்கு தாக்குதல்தாரிகள் தீவைத்தனர். ஆனால் விமானங்கள் எதுவும் தாக்குதலுக்குள்ளாகவில்லை.

இந்தத் தாக்குதலை தாம்தான் நடத்தியதாக பாகிஸ்தான் தாலிபான் பிரிவினர் கூறியிருக்கின்றனர்.

"பாகிஸ்தானின் கிராமங்கள் மீது நடத்தப்படும் குண்டுத் தாக்குதல்களில் அப்பாவிக் கிராமவாசிகள் பலியாவதற்கு பழிக்குப் பழி வாங்க நாங்கள் இன்னும் இருக்கிறோம் என்பதை பாகிஸ்தான அரசுக்குச் சொல்லவே இந்தத் தாக்குதலை நடத்தினோம்" என்று பாகிஸ்தான் தாலிபான் அமைப்புக்காகப் பேசிய ஷாஹிதுல்லா ஷாஹித் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.

இதே போன்ற தாக்குதல்களை பாகிஸ்தானின் கடற்படை மற்றும் விமானப்படைத் தளங்களின் மீதும் முன்னர் தாலிபான்கள் நடத்தியிருக்கின்றனர்.

இந்தச் செய்தி குறித்து மேலும்