வியட்நாமில் பெருஞ்செல்வந்தருக்கு 30 ஆண்டு சிறை

கைதான நிலையில் கியென் (கோப்புப் படம்) படத்தின் காப்புரிமை Kenh13.info
Image caption கைதான நிலையில் கியென் (கோப்புப் படம்)

கோடிக்கணக்கான டாலர்கள் மோசடியில் ஈடுபட்ட குற்றத்துக்காக, வியட்நாமின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவரும், ஆடம்பரம் மிக்க தொழிலதிபர்களில் ஒருவருமான ங்யுயென் டுக் கியெனுக்கு (Nguyen Duc Kien) முப்பது ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஹனோய் நகரின் தலைசிறந்த கால்பந்தாட்ட அணியின் உரிமையாளராக இருக்கின்ற கியென் வரி ஏய்ப்பு செய்ததாகவும் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும் குற்றங்காணப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு கியென் கைதுசெய்யப்பட்டபோது அவர் ஆரம்பித்திருந்த ஏசியா கமர்ஷியல் பேங்க் என்ற பெரிய வங்கியின் பங்கு விலைகள் சரிவைக் கண்டிருந்தன.

முன்பு இவர் வியட்நாம் பிரதமர் ங்யுயென் டன் ஸுங்க்கு (Nguyen Tan Dung) நெருக்கமாக இருந்தவர்.

ஆட்சியில் இருந்துவருகின்ற கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடக்கும் உட்கட்சி சண்டைகளின் விளைவாகத்தான் கியெனுக்கு எதிராக இந்த குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டதாக நோக்கர்கள் சிலர் கூறுகின்றனர்.