கராச்சி விமான நிலையம் அருகில் மீண்டும் தாக்குதல்

படத்தின் காப்புரிமை Reuters
Image caption எதிர் தாக்குதலில் பாகிஸ்தானியப் படையினர்

கராச்சி விமான நிலையத்துக்கு அருகில் மேலும் ஒரு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

பாகிஸ்தானில் அதிமான விமான சேவைகள் இடம்பெறும் கராச்சி விமான நிலையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை முறியடித்து, அதை தமது கட்டுப்பாட்டில் பாதுகாப்பு படையினர் கொண்டுவந்து, ஒரு நாளான நிலையில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

விமான நிலையத்துக்கு வெளியே இருக்கும் பாதுகாப்புப் படையினரின் ஒரு பயிற்சி முகாம் மீது, மோட்டார்பைக்கில் வந்த இரு துப்பாக்கிதாரிகள், துப்பாக்கிச்சூடுகளை நடத்தினர்.

இதற்கு தாங்களே பொறுப்பு என்று தாலிபான்கள் கூறியுள்ளனர். எனினும் இன்றையத் தாக்குதலில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை.

இந்தத் துப்பாக்கிச் சூடு சுமார் ஒருமணி நேரம் நடைபெற்றது என்றும், சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்த காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் திருப்பிச் சுட்டனர் என்றும் அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

அங்கு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் அதேவேளை, கராச்சி விமான நிலையத்திலில் சேவைகள் தொடங்க ஆரம்பித்துள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பாகிஸ்தானிய தாலிபான்கள், கராச்சி விமான நிலையத்தின் மீது நடத்திய தாக்குதலில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டனர்.