இராக்கில் பெரும் அச்சுறுத்தலாக உருவாகியுள்ள 'இசிஸ்' யார்?

  • 11 ஜூன் 2014
படத்தின் காப்புரிமை AP
Image caption மோசுல் நகரைவிட்டு வெளியேறும் மக்கள்

இராக்கின் இரண்டாவது பெரிய நகரான மோசுலை இசிஸ் அமைப்பைச் சேர்ந்த ஜிகாதிகள் கைப்பற்றியுள்ளது, உள்நாட்டில் மட்டுமல்ல, வெளியேயும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இசிஸ் என்றால் என்ன, அவர்கள் யார் ? இராக்கிய இஸ்லாமிய தேசம் அல்லது இராக்கிலுள்ள இஸ்லாமிய தேசம் மற்றும் லெவெண்ட் எனும் அமைப்பின் சுருக்கமே இசிஸ்.

அதாவது ஆங்கிலத்தில் ISIS என்று குறிக்கப்படும் இதில் முதல் மூன்று எழுத்துக்களான ஐ எஸ் மற்றும் ஐ என்பது ஆங்கிலத்தில் இஸ்லாமிக் ஸ்டேட் இன் இராக் என்பதின் சுருக்கம்.

கடைசியிலுள்ள எஸ் எனும் எழுத்து அரபு வார்த்தையான அல் ஷாம் என்பதைக் குறிக்கும்.

இசிஸ் அமைப்பு முதலில் அல் கயீதா அமைப்பிலிருந்துதான் உருவானது. ஆனால் அது உருவானதிலிருந்து அதன் தாய் அமைப்பான அல் கயீதா அதை நிராகரித்துப் புறந்தள்ளியிருக்கிறது.

2013 ஏப்ரல் மாதத்தில் உருவாக்கப்பட்ட போது , இசிஸ் அமைப்பு முழுக்க முழுக்க ஒரு இராக்கிய அமைப்பாகவே இருந்தது. ஆனால் இப்போது தமது அமைப்பில் ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாட்டவர் இருக்கிறார்கள் என அவர்கள் கூறுகிறார்கள்.

அண்டை நாடான சிரியாவில் நடைபெற்ற மோதலில் இந்த அமைப்பு மிகவும் ஆக்ரோஷமாக பெரிய அளவில் பங்கெடுத்தது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption பல தாக்குதல்களில் ஏராளமானவர்களை இசிஸ் கொன்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கள்

இராக்கிலே ஒருங்கிணைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான தாக்குதலை இந்த அமைப்பு நடத்தி ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றுள்ளனர்.

பல மாதங்களுக்கு முன்னர் தலைநகர் பாக்தாதுக்கு அருகிலுள்ள இரண்டு நகரங்களை இவர்கள் கைப்பற்றியுள்ளனர்.

இன்னும் இசிஸ் அமைப்வு எவ்வளவு பெரியது என்பது சரியாகத் தெரியவில்லை.

உலகளவில் அல் கயீதாவையும் மிஞ்சும் அளவுக்கு அபாயகரமான ஜிகாதி குழுவாக இது உருவாகி வருவது போலத் தோன்றுகிறது என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

பக்தாதி- களத்தில் நின்று போரிடும் தளகர்த்தர்

இந்த அமைப்புக்கு தலைமையேற்று நடத்துபவர் அபு பக்கர் அல் பகதாதி. அவரைப் பற்றி மிகக் குறைவான அளவுக்கே தகவல்கள் உள்ளன.

ஆனால் களத்தில் நின்று போரிடும் தளகர்த்தராகவும், போர்த்தந்திரங்களில் சிறந்தவராகவும் கருதப்படும் அல் பக்தாதியால், இசிஸ் அமைப்பை , இஸ்லாமிய மதகுருவான அய்மான் அல் ஸவாகிரியால் தலைமை தாங்கி நடத்தப்பட்டுவரும் , அல் கயீதாவை விட , இளம் ஜிகாதிகளைக் கவர்ந்திழுக்கும் உருவாக்க முடிந்திருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

2003 ஆண்டில் அமெரிக்கா தலைமையிலான தாக்குதல் இராக் மீது இடம்பெற்றபோது அவர் கிளர்ச்சிக் குழுவில் சேர்ந்துள்ளார். பின்னர் 2010 ஆம் ஆண்டு இராக்கில் அல் கயீதா அமைப்புக்கு தலைவரானார். அந்தக் குழுவே பின்னர் இசிஸாக உருவாகியுள்ளது.

இராக் மற்றும் சிரியாவிலுள்ள பல பகுதிகளை இணைத்து ஒரு இஸ்லாமிய ராஜ்ஜியத்தை அமைப்பதே இவர்களது நோக்கம்.

கடந்த 2013 ஆம் ஆண்டு இசிஸ் அமைப்பு சிரியாவிலுள்ள ரக்கா நகரைக் கைப்பற்றியது. அவர்கள் கைப்பற்றிய முதல் பிராந்தியத் தலைநகர் இதுவே.

Image caption பல நகரங்கள் இவர்கள் கட்டுப்பாட்டில் இப்போது வந்துள்ளன

இந்த ஆண்டு ஜனவரி மாதம் இராக்கில் ஷியா மற்றும் சுன்னிப் பிரிவு முஸ்லிகளுக்கு இடையே இசிஸ் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, சுன்னிப் பிரிவு மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஃபலூஜா நகரைக் கைப்பற்றினர்.

பின்னர் ரமாடி நகர் அவர்கள் வசம் வந்தது.

ஆனாலும் மோசுல் நகரை அவர்கள் கைப்பற்றியதே உலகெங்கும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளன.