இராக் ஒரே தேசமாக இருக்குமா என்று கேள்விகள்

படத்தின் காப்புரிமை bbc
Image caption இராக்கில் யார் வசம் எந்தப் பகுதி என்பதைக் காட்டும் வரைபடம்

இராக்கில் மேலும் மேலும் நிலப்பரப்புகளை கைப்பற்ற இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்கள் நகர்வுகளை செய்துவரும் வேளையில், நாடு துண்டாகாமல் இருக்குமா என்று கேள்விகள் எழுந்துள்ளன.

இதனிடையே இஸ்லாமிய ஆயுதக் குழுவான ஐசிஸும் இதர அமைப்புகளும் தலைநகர் பாக்தாதுக்கு 60 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பகூபா நகரின் சில புறநகர்ப் பகுதிகளை சிறிது நேரம் கைப்பற்றி தமது பிடியில் வைத்திருந்தனர் என்றும், பிறகு அவற்றை அரச படைகள் மீண்டும் தமது வசம் கொண்டுவந்துள்ளன என்றும் பிபிசியின் பாகதாத் செய்தியாளர் கூறுகிறார்.

Image caption இராக் துண்டாகக் கூடும் என்று கவலைகள் எழுந்துள்ளன.

பகூபா நகரை இஸ்லாமியத் தீவிரவாதிகள் கைப்பற்ற முயற்சிகள் மேற்கொண்டதை அடுத்து அச்சமடைந்துள்ள மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள் என்றும் எமது செய்தியாளர் கூறுகிறார்.

இதனிடையே, இனியும் இராக் ஒருங்கிணைந்த ஒரு தேசமாக இருக்கும் என்று தனக்கு நம்பிக்கை இல்லை என்று, தன்னாட்சி அதிகாரம் கொண்ட குர்திஷ் பிராந்தியத்தின் பிரதமர் நட்செர்வன் பர்சானி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

ஐசிஸ் கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான சுன்னி ஆயுத்தாரிகள் கடந்த வாரம் மோசுல் நகரை கைப்பற்றுவதற்கு முன்பான நிலைக்கு இராக் திரும்பும் என்கிற நம்பிக்கை தனக்கு இல்லை என்று அவர் கூறுகிறார்.

Image caption பகூபா நகர் யார் வசம்?

ஆனால் இராக் அரசோ மக்கள் ஒன்றுபட்ட தேசத்தையே விரும்புகின்றனர் என்று கூறுகிறது.

இராக்கில் இப்போது நடைபெறும் சம்பவங்களுக்கும் இரானுக்கும் நெருங்கியத் தொடர்பு உள்ளது. அது ஷியாப் பிரிவு முஸ்லிம்களின் சித்தாந்த ரீதியிலான ஒரு தொடர்பு என பிபிசியின் மத்திய கிழக்குப் பகுதியின் ஆசிரியர் சபாஸ்டியன் அஷர் கூறுகிறார்.

அந்த உறவு அரசியல் ரீதியானது மட்டுமல்ல, பொருளாதார மற்றும் கலாச்சார ரீதியானதும் கூட என அவர் மேலும் கூறுகிறார்.

Image caption ஐசிஸ் இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவின் பிடியில் பல பகுதிகள்

இதனிடையே இராக்கிய மக்களின் தேவைகள் மீது கவனம் செலுத்தப்படாததே அங்கு தீவிரவாதம் வளர்வதற்கு முக்கியக் காரணம் என்று ஐ நா வின் தலைமைச் செயலர் பான் கீ மூன் கூறியுள்ளார்.

நாட்டில் உடனடியாக அமைதியும், ஸ்திரத்தன்மையும் ஏற்பட இராக் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயலபட வேண்டும் என பான் கீ மூன் கோரியுள்ளார்.