இராக்கில் அமெரிக்கா தலையிடக்கூடாது: இரான்

அயதுல்லா அலி கமெனெய் படத்தின் காப்புரிமை AP
Image caption இரானில் முக்கிய அரசியல் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் அயதுல்லாவுக்கு உண்டு

இராக்கில் அமெரிக்காவோ வேறு எந்த நாடுமோ தலையிடுவதை தான் கடுமையாக எதிர்ப்பதாக இரானின் அதியுயர் தலைவர் அயதுல்லா அலி கமெனெய் கூறுகிறார்.

இராக்கில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டுரும் வல்லமை அந்நாட்டின் அரசாங்கத்துக்கும் மதத் தலைவர்களுக்கே இருக்கத்தான் செய்கிறது என அயதுல்லாவை மேற்கோள்காட்டி இரான் அரச செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதனிடையே, பிராந்தியத்திலுள்ள எண்ணெய் வளமிக்க நாடுகள் தமது செல்வச்செழிப்பை பயன்படுத்தி, இராக்கின் கிளர்ச்சிக்காரர்களுக்கு நிதி வழங்குவதை இரானின் அதிபர் ஹஸ்ஸான் ருஹானி விமர்சித்துள்ளார்.

சௌதி அரேபியாவையும், கத்தாரையும் மறைமுகமாக குறிப்பிடும் விதமாக சொன்ன அதிபர் ருஹானி, ஆயுததாரிகள் அந்த நாடுகளையேகூட இலக்குவைப்பார்கள் எனவே பிற்காலத்தில் அவர்களின் கொள்கை அவர்களுக்கே பாதகமாக முடியும் என எச்சரித்துள்ளார்.