நூறாண்டு கால மாபியா கொலை மர்மம் தீர்ந்தது தற்செயலாக

படத்தின் காப்புரிமை AFP
Image caption மாபியாக் கும்பல்கள் ஆதிக்கம் செலுத்தும் சிசிலி தீவு

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் மாபியா கும்பல் செய்த கொலை என்று சந்தேகிக்கப்பட்ட கொலையைச் செய்தவர் யார் என்ற மர்ம முடிச்சை இப்போது தற்செயலாக அவிழ்த்திருப்பதாக சிசிலி போலிசார் கூறுகின்றனர்.

மாபியாக் கும்பல்களை உலகுக்குத் தந்த இத்தாலியின் சிசிலி தீவின் தலைநகர் பாலெர்மோவில் , மிரட்டிப் பணம் பறிக்கும் குழுக்கள் இரண்டைச் சேர்ந்த 95 பேரை சிசிலி போலிசார் கைது செய்து விசாரித்துக்கொண்டிருந்தபோது அவர்களில் ஒருவர் தற்செயலாக தொலைபேசியில் இந்தக் கொலை விவரத்தை தனது சகா ஒருவரிடம் கூறியதை ஒட்டுக்கேட்ட போலிசார் இதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

டொமினிக் பேலசேட்டோ என்ற அவர் , தனது அப்பாவின் மாமாவான , பாவோலோ பேலசேட்டோ என்பவர், இந்தக் கொலையைச் செய்தார் என்றும், இந்த கொலைக்கான உத்தரவை சிசிலியிலிருந்து அமெரிக்காவில் இயங்கிய கோசா நோஸ்ட்ரோ என்ற மாபிய குழுவின் தலைவர், கேசியோ பெர்ரோ என்பவர் தந்தார் என்று அவர் கூறினாராம்.

பிரபலமான போலிஸ் அதிகாரி

பெரிய அளவு பொதுமக்கள் மத்தியில் மதிக்கப்பட்ட அமெரிக்க போலிஸ் அதிகாரியான , ஜோ பெட்ரோசினோ, 1909ல் இத்தாலிக்கு தெற்கே உள்ள தீவான சிசிலியின் பாலர்மோ நகரில் சுட்டுக்கொல்லப்பட்டது, நியுயார்க் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லெப்டினண்ட் பெட்ரோசினோ, நியுயார்க் நகரில் ஆதிக்கம் செலுத்தி வந்த இத்தாலிய மாபியாக் கும்பலை ஒடுக்க உருவாக்கப்பட்ட போலிஸ் சிறப்புக் குழு ஒன்றை நிறுவியவர். அவரது போலிஸ் படை, நியுயார்க் மாபியா கும்பலுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது. இந்த நிலையில், 1909 மார்ச் மாதத்தில் அவர் இத்தாலியின் சிசிலிக்கு இந்த மாபியா கும்பல் குறித்து மேலும் ஆதாரங்களைத் திரட்ட வந்தார். ஆனால் அவரை பாலர்மோ நகருக்கு வரவழைத்ததே, அவரைக் கொல்ல திட்டமிட்ட மாபியாக் கும்பல்தான் என்று பின்னர் தெரியவந்தது. தனக்கு துப்பு தர ஒப்புக்கொண்ட ஒரு நபருக்காகக் காத்திருந்தபோது, பெட்ரோசினோ சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவர் கொலை சம்பத்தை அடுத்து நியுயார்க் நகரில் நடந்த அவரது இறுதிச்சடங்குகளில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர். ஆனாலும் அவர் கொலைக்குக் காரணமானவர்கள் யாரென்பது கண்டுபிடிக்கப்படாத புதிராகவே இருந்தது. இந்த நிலையில், சிசிலியில் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டுக்கொண்டிருந்த இத்தாலிய போலிசார், இந்தக் கொலையை யார் செய்தது என்பதைத் தற்செயலாகக் கண்டுபிடித்திருக்கின்றனர். ஆனால் 100 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த இந்தச் செய்தியினால் என்ன பலன் என்பது தெரியவில்லை.