ஸ்பெயின் மன்னரின் சகோதரி மீது ஊழல் வழக்கு விசாரணை

படத்தின் காப்புரிமை AP
Image caption இளவரசி கிறிஸ்டினா மற்றும் அவரது கணவர்

ஸ்பெயினின் புதிய மன்னராக பட்டம் சூட்டப்பட்டுள்ள ஃபெலிப்பே அவர்களின் சகோதரி, ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஒன்றில் சந்தேக நபராக முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவர் மீதான குற்றவியல் விசாரணைகள் தொடங்குவதற்கு வழி ஏற்பட்டுள்ளது.

இளவரசி கிறிஸ்ட்டினா மீது வரி மோசடி மற்றும் சட்டவிரோத பணப்பறிமாற்றம் ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தனது கணவர் இனாகி உர்டன்கரின், மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்கிற குற்றச்சாட்டுக்களை இளவரசி கிறிஸ்டினா அறிந்திருந்தார் என, விசாரணைகளை முன்னெடுத்துவரும் நீதிபதி நம்புகிறார்.

இனாகி அவர்கள் பொதுமக்கள் பணத்திலிருந்து பல மில்லியன் யூரோக்களை கையாடல் செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption புதிய மன்னர் ஃபெலிப்பே

வழக்கு விசாரணைக்கு முன்னரான பூர்வாங்க விசாரணைகளில் இந்தத் தீர்ப்பு வந்துள்ளது என்பதும், இன்று வந்துள்ள இந்தத் தீர்ப்புக்கு எதிராக அந்த தம்பதியினர் மேல்முறையீடு செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

இவையெல்லாம் புதிய அரசருக்கு பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறுகிறார் தலைநகர் மட்ரிடில் இருக்கும் பிபிசியின் செய்தியாளர்.

ஸ்பானிஷ் ராஜ வம்சத்தின் நம்பகத்தன்மை குலைந்து போயுள்ள நிலையில், அதை சீர் செய்ய புதிய அரசர் முயற்சிகளை எடுத்துவரும் வேளையில், இந்தக் குற்றச்சாட்டுக்கள் அவருக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் மேலும் கூறுகிறார்.