மலேசிய விமானத்தைத் தேடும் முயற்சி இடம் பெயர்கிறது

படத்தின் காப்புரிமை REUTERS
Image caption தேடல் முயற்சி புதிய இடத்துக்கு நகர்கிறது

காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைத் தேடும் புதிய முயற்சிகள் சமீபத்தில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் அது விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட இடத்திருந்திலிருந்து மேலும் தெற்காக நகரும் என்று ஆஸ்திரேலியா கூறியிருக்கிறது.

காணாமல் போன விமானத்திலிருந்து வந்த செய்கோள் தரவுகளை மீண்டும் ஆராய்ந்ததன் அடிப்படையில் இந்த புதிய தேடல் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது என்று ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் வாரன் ட்ரஸ் கூறினார்.

இந்தப் புதிய இடம், ஆஸ்திரேலியாவின் மேற்குக் கடற்கரைக்கு சுமார் 1,800 கிமீ தெற்காக இருக்கிறது. சுமார் 60,000 சதுர கிமீ பரப்பளவுள்ள இந்த இடத்தில் புதிய தேடல் முயற்சிகள் நடக்கும்.

விமானம் விழுந்து நொறுங்கியபோது, அது தானியங்கி நிலையில் பறந்து கொண்டிருந்ததாக உறுதியாகத் தோன்றுவதாகவும் அவர் கூறினார்.

இந்த புதிய தேடல் பகுதியின் கடலடிப்பரப்பை வல்லுநர்கள் வரைபடமாக்கிய பின்னர், புலனாய்வு அதிகாரிகள், இந்த இடத்தில் விழுந்திருக்கக்கூடிய விமானத் துகள்களைத் தேட, மிகவும் சிறந்த, அதே சமயம், மிகவும் பொருத்தமான நீர்மூழ்கிக் கருவிகளைக் கொண்டுவரவழைப்பார்கள்.

இந்த எம்.எச்.370 மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சுமார் 240 பயணிகளுடன் மார்ச் மாதத்தில் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் செல்லும் வழியில் காணாமல் போனது.