உலக முஸ்லீம்கள் புதிய இஸ்லாமிய அரசுக்கு வர ஐஸிஸ் அழைப்பு

படத்தின் காப்புரிமை AFP
Image caption இஸ்லாமிய கிலாஃபத்தில் வந்து குடியேற உலக முஸ்லீம்களை அழைக்கிறார் அல் பக்தாதி

உலக முஸ்லீம்கள் இராக் மற்றும் சிரியாவுக்கு வந்து புதிதாக உருவானதாக அறிவிக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய அரசை பலப்படுத்த ஐஸிஸ் அமைப்பின் தலைவர் அபு பக்ர் அல் பக்தாதி கோரியிருக்கிறார்.

இந்தப் புதிய இஸ்லாமிய நாட்டுக்கு வந்து குடியேறுவது என்பது முஸ்லீம்களுக்குரிய "கடமை" என்று அவர் ஒலிப்பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட செய்தி ஒன்றில் கூறியிருக்கிறார்.

குறிப்பாக, நீதிபதிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், ராணுவ மற்றும் நிர்வாகத் திறமை கொண்டவர்கள் இந்தப் புதிய இஸ்லாமிய கிலாஃபத்துக்கு வரவேண்டும் என்று அவர் கோரியிருக்கிறார்.

"சிரியா , சிரியர்களுக்கு மட்டுமானதல்ல, இராக், இராக்கியர்களுக்கு மட்டுமானதல்ல , முஸ்லிம் மக்களே உங்கள் நாட்டுக்கு விரைந்து வாருங்கள் ", என்று செவ்வாய்க்கிழமை விடுத்த இந்த ஒலிச்செய்தியில் அல் பக்தாதி கூறியிருக்கிறார்.

'ரமதான் மாதத்திலும் போரிடுங்கள்'

ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய ரமதான் மாதத்தில் போரைத் தீவிரப்படுத்துமாறு கோரிய அவர், அல்லா காட்டிய வழியில் புனிதப் போரை ( ஜிஹாத்) நடத்துவதைக் காட்டிலும் இந்த புனிதமான மாதத்தில் செய்யக்கூடிய புனிதமான பணி வேறொன்றும் இருக்கமுடியாது, எனவே இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, உங்கள் தூய்மையான முன்னோர்களின் வழியில் செல்லுங்கள் " என்று அவர் இந்த 19 நிமிட ஒலிச் செய்தியில் கூறியிருக்கிறார்.

இந்தச் செய்தியில், மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் தொடங்கி, பர்மா வரை, முஸ்லீம்களுக்கெதிரான வன்முறை நடக்கும் நாடுகளை அவர் பட்டியலிட்டிருக்கிறார்.

ஐஸிஸ் அமைப்பின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள இவரைப்பற்றி அதிகம் அறியப்படவில்லை. ஒசாமா பின் லேடன் மாதிரியோ அல்லது அவருக்குப் பின் வந்த அய்மான் அல் ஸவாகிரி போலவோ இவர் வீடியோ பதிவுகளில் காணப்படவில்லை.