மலேசிய இளவரசருக்கு நெருக்கமான பெண் கொலை

படத்தின் காப்புரிமை bbc
Image caption மாடலான சூஸலு, மலேசிய இளவரசருக்கு நெருக்கமானவர்

மலேசியாவின் ஜோஹர் அரச குடும்ப இளவரசரோடு நெருங்கிய தொடர்புடையதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவர் கொலைசெய்யப்பட்டிருப்பதாக மலேசியக் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் ராவா என்ற தீவில் நிகழ்ந்துள்ளது.

எஸ்டோனியாவைச் சேர்ந்த ரெஜினா சூஸலு என்ற அந்த 30 வயதுப் பெண் விளம்பர மாடலாக செயல்பட்டுவந்தார்.

மரணம் நடந்து சில நாட்களுக்குப் பிறகே, இந்த விவகாரம் வெளியில் வந்திருப்பதால், இந்த மரணத்தை மூடி மறைக்கும் முயற்சிகள் நடந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஜோஹர் அரச குடும்ப இளவரசர் ஒருவரோடு நெருக்கமாகப் பழகிவந்ததாகக் கூறப்படுகிறது. மலேசியாவின் 9 அரச குடும்பங்களில ஜோஹர் அரச குடும்பமும் ஒன்று.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ராவா தீவு ஜோஹர் அரச குடும்பத்திற்குச் சொந்தமானது என மலேசிய மக்கள் நம்புகிறார்கள்.

இந்தத் தீவுக்கு ஜூலை 1ஆம் தேதியன்று சூஸலு வந்தார். அதே நாளில் அவரது சடலம் கடற்கரை ஓரமாகக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என நம்பப்பட்டது.

ஆனால், தற்போது அவரது உடலில் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதால், அவரது மரணம், கொலை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட இளவரசரிடம் விசாரணை நடத்தப்பட்டதா என்ற தகவல் தெளிவுபடுத்தப்படவில்லை.

ஜோஹர் அரச குடும்பத்தினர் சம்பந்தப்பட்டு, இதற்கு முன்பும் அந்த்த் தீவில் பல வன்முறைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

2012ஆம் ஆண்டில், சுல்தானின் படகுக்குள் சென்றதாகக் கூறி நான்கு சுற்றுலாப் பயணிகள் அரச குடும்பக் காவலர்களால் தாக்கப்பட்டனர்.

2005ஆம் ஆண்டில் ஜோஹர் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஒருவர், கும்பலை அழைத்துச் சென்று, ஒரு பிரேசில் தம்பதியின் திருமணத்தைத் தடுத்து நிறுத்தினார். அங்கிருந்த விருந்தினர்களும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டனர்.