கார்பன் வரி ரத்துக்கு ஆஸ்திரேலிய செனேட் ஒப்புதல்

ஆஸ்திரேலிய தொழிற்சாலை ஒன்று படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஜனத்தொகை அடிப்படையில் பார்க்க அதிகமாக வெப்பவாயு வெளியேற்றும் வளர்ந்த நாடு ஆஸ்திரேலியாதான்

ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்ற மேலவையான செனேட், அந்நாட்டில் தொழில்நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்டு வந்த கார்பன் வரியை ரத்து செய்வதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.

செனெட் அவையில் இந்த வரி ரத்து செய்யப்படுவதற்கு ஆதரவாக 39 வாக்குகளும், எதிராக 32 வாக்குகளும் விழுந்துள்ளன.

சுற்றுச்சூழல் மாசுக்களை அதிகமாக வெளியேற்றக்கூடிய நிறுவனங்கள் மீது விதிப்பதற்காக முந்தைய தொழிற்கட்சி அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட வரி இது.

சென்ற ஆண்டு நடந்த தேர்தலில் தொழிற்கட்சியை வீழ்த்தி தாராளவாத தேசியக் கூட்டணியின் சார்பில் பிரதமராக ஆகியிருந்த டோனி அப்பாட், இந்த வரியை ரத்துசெய்வதை தமது அரசாங்கத்தின் முக்கிய லட்சியங்களில் ஒன்று என்று கூறியிருந்தார்.

இந்த வரி அந்நாட்டின் அரசியல்வாதிகளிடம் பெரும் விவாதத்துக்கும் சர்ச்சைக்குமுரிய விவகாரமாக இருந்துவந்தது.

புவி வெப்பமடைவதைச் சமாளிக்க வேண்டுமானால் இந்த வரி அவசியம் என தொழிற்கட்சி வாதிட்டது.

ஆனால் நியாயமாக தொழில்நடத்தும் நிறுவனங்களுக்கு தண்டனை விதிப்பதைப் போலவே இந்த சட்டம் செயல்பட்டுவருகிறது என்பதாக தாராளவாதக் கட்சியினர் கூறிவந்தனர்.

2012ஆம் ஆண்டு ஜூலையில் இந்த வரி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

அதிகமாக சுற்றுச்சூழல் மாசுவை ஏற்படுத்தும் 348 நிறுவனங்கள், அவை வெளியேற்றும் ஒவ்வொரு டன் வெப்பவாயுவுக்கும் 23 அமெரிக்க டாலர்கள் என்ற கணக்கில் வரி செலுத்த வேண்டும் என்பது இந்த சட்டம்.

ஜனத்தொகை அடிப்படையில் பார்க்கையில் வளர்ந்த நாடுகளில் அதிகமாக சுற்றுச்சூழல் மாசை வெளியிடும் நாடு ஆஸ்திரேலியாதான்.

ஆனால் கார்பன் வரியால் வேலைகள் பறிபோவதாகவும், எரிசக்தியின் விலை அதிகரிப்பதாகவும் பிரதமர் அப்பாட் உள்ளிட்ட விமர்சகர்கள் வாதிட்டுவந்தனர்.

இந்த வரிக்கு பதிலாக, தொழில்நிறுவனங்கள் தமது வெப்பவாயு வெளியேற்றத்தைக் குறைத்துக்கொள்வதையும், சுத்தமான எரிசக்தி ஆதாரங்களை அதிகமாகப் பயன்படுத்துவதையும் ஊக்குவிப்பதற்கென இரண்டரை பில்லியன் டாலர் திட்டம் ஒன்றைக் கொண்டுவர அப்பாட் திட்டமிடுகிறார்.