மலேசிய விமானம் : சடலங்கள் நெதர்லாந்து செல்கின்றன

படத்தின் காப்புரிமை EPA
Image caption நெதர்லாந்தில் ஒரு நாள் தேசியத் துக்க தினம் அனுசரிப்பு

உக்ரைன் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தில் பயணித்த சிலரது சடலங்கள், கார்க்கிவ் நகரிலிருந்து இராணுவ சரக்கு விமானம் மூலம் அந்நாட்டிலிருந்து எடுத்துச் செல்ல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அவ்வகையில் 16 சவப்பெட்டிகள் நெதர்லாந்துக்கு திருப்பி அனுப்பப்படுவதற்காக இராணுவ விமானத்தில் ஏற்றப்பட்டன.

முழுமையாக கண்டெடுக்கப்பட்ட 40 சடலங்கள் இன்று நெதர்லாந்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்று டச்சு நாட்டு அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இதனிடையே, அந்த விமானம் சுடப்பட்டு, அதனால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக, இன்று தெர்லநாந்தில் ஒரு நாள் தேசியத் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

சடலாங்களை ஏற்றிக் கொண்டு அந்த விமானம் நெதர்லாந்துக்கு வரும்போது, அவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக, டச்சு மன்னர், அரசி, பிரதமர் மற்றும் இதர முக்கியஸ்தர்கள் ஐண்டோவன் வான்படை தளத்துக்கு வருவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அந்த விமானத்தில் பயணித்த 298 பேரில், கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் எவ்வளவு பேரின் சடலங்கள் செவ்வாய்க்கிழமை கார்க்கிவ் பகுதிக்கு எடுத்து வரப்பட்டன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

படத்தின் காப்புரிமை EPA
Image caption தொடரும் அஞ்சலிகள்

இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதால் உயிரிழந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.