காசா: போர்நிறுத்தம் அறிவித்த பின்னரும் மோதல்கள் தொடருகின்றன

காசாவில் குண்டுவீச்சு ஞாயிறன்று மீண்டும் ஆரம்பித்திருந்தது படத்தின் காப்புரிமை Getty
Image caption காசாவில் குண்டுவீச்சு ஞாயிறன்று மீண்டும் ஆரம்பித்திருந்தது

காசாவில் 24 மணி நேர போர்நிறுத்தம் அறிவித்திருந்த ஹமாஸ், அதன் பின்னர் தொடர்ந்தும் ரொக்கெட்டுகளை இஸ்ரேல் மீது வீசிவருகிறது.

இஸ்ரேல் நேற்று கடைப்பிடித்திருந்த தாக்குதல் இடைநிறுத்தம் முடிந்த நிலையில் இராணுவத் தாக்குதல்களை இன்று அது மீண்டும் ஆரம்பித்திருந்தது.

அதன் பின்னர் சில மணி நேரங்களில்தான் ஹமாஸ் போர்நிறுத்தம் அறிவித்தது.

நோன்புப் பெருநாள் வருவதை முன்னிட்டு தாக்குதலை நிறுத்த அனைத்து பாலஸ்தீனப் பிரிவுகளும் உடன்படுவதாக ஹமாஸ் கூறியிருந்தது.

ஆனால் அதன் பின்னரும் ஹமாஸ் ரொக்கெட் வீசியுள்ளது, ஹமாஸின் சமாதான யோசனைகளை இஸ்ரேல் நம்பக்கூடாது என்பதையே காட்டுவதாக இஸ்ரேலியப் பிரதமர் பென்யமின் நெதன்யாஹு கூறினார்.

தனது மக்களைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமோ அதை இஸ்ரேல் செய்யும் என்று அவர் சூளுரைத்துள்ளார்.

ஞாயிறன்று இஸ்ரேல் தாக்குதல்களை ஆரம்பித்த பின்னர் காசாவில் பல இடங்களில் பெரிய வெடிச்சத்தங்கள் கெட்டிருந்தன. காசா நகரின் கிழக்கே கடுமையான ஷெல் வீச்சு நடந்துவருவதாக சாட்சிகள் கூறுகின்றனர்.

ஞாயிறன்று தாக்குதல் ஆரம்பித்த பிற்பாடு எட்டு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

காசாவிலிருந்து இஸ்ரேலுக்குள் ஞாயிறன்று இதுவரை மட்டுமே 28 ரொக்கெட்டுகள் வந்து விழுந்துள்ளதாகவும், ஹமாஸின் மோர்டார் குண்டில் சிக்கி இஸ்ரெலியச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் கூறுகின்றன.

கடந்த ஜூலை எட்டாம் தேதி ஆரம்பித்த இந்த மோதல்களில் இதுவரை உயிரிழந்துள்ள பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை குறைந்தது 1060 ஆகியுள்ளது. இதில் பெரும்பான்மையானோர் சிவிலியன்கள்.

பாலஸ்தீனத் தரப்பில் 43 சிப்பாய்களும் 2 சிவிலியன்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தச் செய்தி குறித்து மேலும்