ஒரே பிரசவத்தில் மூன்று பாண்டாக் குட்டிகள் : சீனாவில் அதிசயம்

படத்தின் காப்புரிமை AFP
Image caption அபூர்வப் பாண்டாக் குட்டிகள்

சீனாவிலுள்ள ஒரு மிருகக்காட்சி சாலையில், மிகவும் அரிதான வகையில் ஒரே பிரசவத்தில் மூன்று பாண்டாக் குட்டிகள் பிறந்துள்ளன என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இவை கடந்த மாதத்தின் இறுதிப் பகுதியில், குவாங்சூவிலுள்ள மிருகக்காட்சி சாலையில் பிறந்துள்ளன.

பாண்டாக்கள் பிறந்தவுடன் உயிர் பிழைக்கும் விகிதம் மிகவும் குறைவானது என்பதால், இந்த மூன்று குட்டிப் பாண்டாக்களின் பிறப்பு குறித்த அறிவிப்பு தாமதமானது என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption தாய்ப் பாண்டா ஜூஷியாவ்

இவை பிறந்த பிறகு சில நாட்கள், இன்குபேட்டர்கள் என்று ஆங்கிலத்தில் அறியப்படும் உயிர்காப்புக் கருவிளில் வைத்து பராமரிக்கப்பட்ட பிறகு, தாயுடன் இணைக்கப்பட்டுள்ளன.

அடுத்த ஆறு மாதங்களுக்கு இந்தப் பாண்டாக் குட்டிகள் மிகவும் பலவீனமான நிலையிலேயே இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இதனிடையே, பிரிட்டனின் எடின்பரோ மிருகக்காட்சி சாலையில் இப்போது இருக்கும், டியான் டியான் எனும் பாண்டா கர்ப்பமாக உள்ளது என்று தாங்கள் கருதுவதாகக் கூறும் அதன் பராமரிப்பாளர்கள், இந்த மாதத்தின் இறுதிப் பகுதியில் அது பிரசவிக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.

சீனாவின் தென் மேற்கு காட்டுப் பகுதிகளில் சுமார் 1600 பாண்டாக்கள் மட்டுமே இன்னும் இருக்கின்றன.

பாண்டாக்களின் இனவிருத்தி வீதம் மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.