மெர்சிடிஸ் நிறுவனம் விலைநிர்ணயக் குற்றம் புரிந்துள்ளது: சீனா

படத்தின் காப்புரிமை REUTERS
Image caption ஷங்காய் நகரில் உள்ள மெர்சிடிஸ்- பென்ஸ் விற்பனை நிலையம்

கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes Benz) சீனாவில் போலி-விலைநிர்ணயக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

கிழக்கேயுள்ள ஜியாங்ஸு மாகாணத்தில் அதிகாரிகள் நடத்தியுள்ள விசாரணையின்போது, மெர்சிடிஸ் நிறுவனம் உதிரிப்பாகங்களின் விலைகளை போலியாக நிர்ணயம் செய்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் சீன அரச ஊடகம் கூறியுள்ளது.

பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனத்தின் சீன விற்பனையாளர்கள் மீது கடந்த வாரம் இரண்டரை லட்சம் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.

நிறுவனங்கள் வியாபாரத்தில் ஏகபோக ஆதிக்கம் செலுத்துவதை தடுக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் படி, ஆவுடி(Audi), கிரைஸ்லர் (Chrysler) உள்ளிட்ட கார் நிறுவனங்கள் மீதும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

சீனாவில் வெளிநாட்டு வியாபார நிறுவனங்கள் அளவுக்கு அதிகமாக இலக்குவைக்கப்படுவதால் தமது உறுப்பினர்கள் கவலையடைந்துள்ளதாக ஐரோப்பிய வர்த்தக சம்மேளனம் கடந்த வாரம் அறிவித்திருந்தது.

ஆனால், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடையே தாம் பாரபட்சத்துடன் நடந்துகொள்ளவில்லை என்று சீனா கூறியுள்ளது.