ஐ எம் எஃப் தலைவர் மீது நீதிமன்ற விசாரணைகள்

கிறிஸ்டினா லகார்ட் படத்தின் காப்புரிமை AFP

சர்வதேச நாணய நிதியம் ஐ எம் எஃப்பின் தலைவி கிறிஸ்டினா லகார்ட் மீது ஊழல் குற்றச்சட்டு தொடர்பான விசாரணைகளை பிரெஞ்சு நீதிமன்றம் முன்னெடுத்துள்ளது.

பிரான்ஸில் இடம்பெற்ற ஊழல் ஒன்று தொடர்பிலான விசாரணைகளை நடத்திவரும் நீதிமன்றம், அவர் மீதும் விசாரணைகளை நடத்த உத்தரவிட்டுள்ளது.

இதற்கு முன்னர், நீதிபதிகள் கிறிஸ்டினா லகார்ட் அம்மையாரிடம் விசாரணைகளை நடத்தியிருந்தாலும், அப்போது ஒரு சாட்சி எனும் ரீதியிலேயே அவர் விசாரிக்கப்பட்டார்.

தொழிலதிபர் பெர்னார்ட் டபி அவர்கள் மீதான வழக்கு விசாரணையின்போதே, லகார்ட் அவர்கள் ஒரு சாட்சியாக விசாரிக்கப்பட்டார்.

பிரான்ஸில் கிறிஸ்டினா லகார்ட் நிதியமைச்சராக இருந்த சமயம், பெர்னார்ட் டபி அவர்களின் விளையாட்டு உடைகள் நிறுவனமான அடிடாஸ் விற்கப்பட்டபோது, அவருக்கு 400 மில்லியன் யூரோக்கள் இழப்பீடாக அளிக்கப்பட்டது தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

ஆனால் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று அவர் கூறுகிறார்.

அவர் நான்காவாது முறையாக நேற்று நீதிபதிகளால் விசாரிக்கப்பட்ட பிறகு, அவர் முழுமையான விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.