பெரும் நட்டத்தில் மலேசிய ஏர்லைன்ஸ், 6000 பணிகள் வெட்டு

படத்தின் காப்புரிமை AP
Image caption மலேசியன் ஏர்லைன்ஸ் விமானங்கள்

மலேசியன் ஏர்லைன்ஸ் தனது மொத்தப் பணியாளர்கள் தொகையில், மூன்றில் ஒரு பகுதி அளவான சுமார் 6000 பணியிடங்களை மூடுகிறது.

இந்த ஆண்டு ஏற்பட்ட இரண்டு விமான இழப்புகள், தொடர்ச்சியான நட்டங்கள் ஆகியவற்றை ஈடுசெய்யும் வகையில் செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை, என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நிறுவனத்தின் ஒரு விமானம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் காணாமல் போனது. மற்றொன்று உக்ரைனிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இதையடுத்து மலேசியன் ஏர்லைன்ஸ் மீதான நம்பிக்கை பயணிகள் மத்தியிம் பெருமளவில் குறைந்தது. எனவே மக்கள் அந்த நிறுவனத்தின் விமானங்களில் பயணம் செய்வதை தவிர்த்து வருகின்றனர்.

இவைமட்டுமல்லாமல் பல வழித்தடங்கள் இலாபமில்லாமல் இருந்தன. இவையெல்லாம் சேர்ந்து, செலவினங்களை கட்டுப்படுத்தி நஷ்டங்களை குறைக்கும் நடவடிக்கையே இந்த வேலை இழப்புகளை ஏற்படுத்தியுள்ளன என்று அதன் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

பங்கு வர்த்தகமும் நிறுத்தம்

படத்தின் காப்புரிமை AFP
Image caption தொடரும் துயரம்

இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில், மலேசியப் பங்குச் சந்தையிலிருந்து தமது பங்கு வர்த்த பறிமாற்றங்கள் விலக்கிக் கொள்ளப்படும் என்றும் மலேசியன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

பிறகு புதிய விமான நிறுவனம் ஒன்று ஏற்படுத்தப்படும் என்று, மலேசியன் ஏர்லைன்ஸில் 69 சதவீத பங்குகளை வைத்திருக்கும், கசானா நேசியோனல் நிறுனத்தின் மேலான் இயக்குநர் அஸ்மான் மொக்தர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியப் பெருங்கடலின் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த விமானம் மாயாம மறைந்து போவதற்கு முன்னரே கூட, மலேசிய ஏர்லைன்ஸ் பெரும் நஷ்டங்களை எதிர்கொண்டு வந்தது.

பின்னர் ஜூலை மாதம், உக்ரைன் வான்பரப்பில் ஒரு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானங்களில் பயணம் செய்ய பதிவு செய்துகொள்வோரின் எண்ணிக்கை 30 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.