'யுக்ரெய்ன் மோதல்களுக்கு ரஷ்யா தான் காரணம்': ஒபாமா

படத்தின் காப்புரிமை AP
Image caption அதிபர் ஒபாமா

யுக்ரெய்னில் நடந்துவரும் மோதல்கள் உள்நாட்டு கிளர்ச்சியின் விளைவாக ஏற்பட்டதல்ல என்றும் ரஷ்யாவின் நேரடிச் செயற்பாடுகளே அதற்குக் காரணம் என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

யுக்ரெய்னில் இயங்கும் பிரிவினைவாதிகளுக்கு ரஷ்யாவே பயிற்சி வழங்கி, ஆயுதங்களும் பணஉதவிகளும் வழங்கிவருவதாகவும் ஒபாமா தெரிவித்துள்ளார்.

யுக்ரெய்னுக்குள் ரஷ்யப் படையினர் இருப்பதைக் காட்டுகின்ற படங்கள், அந்நாட்டு அரசுக்குள்ள ஆழமானத் தொடர்புகளை தெட்டத் தெளிவாகக் காட்டுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஷ்யப் படையினரின் செயற்பாடுகள் யுக்ரெய்னுக்குள் பெருமளவு ஊக்கமடைந்திருப்பதாக நேட்டோ இது பற்றி ஏற்கனவே அறிவித்துவிட்டது.

எனினும், ரஷ்யாவின் செயற்பாடுகளுக்கு அமெரிக்காவின் பதில் நடவடிக்கை எப்படியிருக்கும் என்பது பற்றி ஒபாமா எதனையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

ஆனால், ரஷ்யா இன்னும் அதிக இழப்புகளையும் விளைவுகளையும் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.