இந்தியா, பாகிஸ்தான் வெள்ள உயிரிழப்பு 375 ஆக உயர்வு

படத்தின் காப்புரிமை AP
Image caption காஷ்மீர் வெள்ளத்தில் மக்கள்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 375 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் லட்சக்கணக்கான மக்களை மீட்கும் பணிகளை அதிகாரிகள் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய அதிகாரத்துக்கு உட்பட்ட காஷ்மீர் மாநிலத்தில் கிட்டத்தட்ட 175 பேர் வெள்ளத்தால் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் நதி நீர் மட்டம் உயர்ந்ததில் அடித்துச்செல்லப்பட்டனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளின் தலைவர்களும் ஒருவருக்கொருவர் நிவாரண உதவி வழங்க முன்வந்துள்ளனர்.

கடந்த வார இறுதியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப்புக்கு எழுதிய கடிதத்தில், பாகிஸ்தானுக்கு உட்பட்ட பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய இந்திய தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

திங்களன்று இந்த கடிதத்திற்கு பதிலளித்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப், மோடிக்கு நன்றி தெரிவித்தார். அத்துடன் இந்தியாவுக்கு எந்த வகையிலும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய பாகிஸ்தான் தயாராக உள்ளதாகவும், பிரதமர் நவாஸ் ஷரிப் தெரிவித்துள்ளார்.

உலகின் மிக அதிகமாக இராணுவமயப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஒன்றாக காஷ்மீர் இருப்பதால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுளும் இந்த உதவி செய்ய முன்வரும் ஆலோசனையை ஏற்க மாட்டார்கள் என்று செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில் இந்த இரண்டு நாடுகளிலும் மீட்புப் பணிகளில் அந்நாட்டு அதிகாரிகள் தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்றனர். பாகிஸ்தானில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில்தான் உயிரழந்துள்ளனர் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பாகிஸ்தான் அதிகாரத்துக்கு உட்பட்ட காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகளால் சாலைகள் மற்றும் மின் இணைப்புகள் சேதமடைந்துள்ளன. இதனால் மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாமல் பலர் அவதிப்படுகின்றனர். செனாப் நதி திடீரென்று உயர்ந்ததில் ஏற்பட்ட பெரிய வெள்ளத்தில் பல வீடுகள் மூழ்கின.

இந்தியாவின் எல்லைக்கு வெளியேயிருந்து இந்தியாவுக்குள் பாயும் நீர் வரத்தில் ஏற்பட்டுள்ள புதிய வெள்ளம்தான் தற்போதைய கவலையாக உள்ளது என்று ஜம்முவில் உள்ள பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு அம்மாநிலத்தில் கடந்த ஐந்து தசாப்தங்களில் காணாத அளவிலான பெரிய வெள்ளமாக கருதப்படுகிறது. இந்த மோசமான வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் மக்களை மீட்கும் பணிகளை மீட்புப்படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சாலை மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து தொலைதூர பகுதிகளில் தவிக்கும் மக்களை அணுகுவது என்பது ஒரு கடினமான சவாலாக இருக்கிறது.

இந்திய இராணுவம் மற்றும் விமானப் படையினர் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி நிவாரண பொருட்களை மக்களுக்கு விநியோகிக்கின்றனர். அவர்களால் முடிந்தவரை பல ஆயிரம் மக்களை வெள்ளம் ஏற்பட்டுள்ள இடங்களில் இருந்து வெளியேற்றியுள்ளனர். கடற்படை கமாண்டோக்களும் உயிர் பிழைத்தவர்கள் மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மழை குறைந்துள்ளது என்றாலும் இந்திய காஷ்மீரின் பல பகுதிகள் இன்னும் அணுக இயலாத நிலையில் உள்ளன. அதன் தலைநகர் ஸ்ரீநகரின் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

‘ஸ்ரீநகர் மற்றும் தெற்கு காஷ்மீரில் சிக்கித்தவிக்கும் மக்களை கூடிய விரைவில் மீட்பதே எங்களின நோக்கம். இந்த நிலையிலிருந்து அனைவரும் காப்பாற்றப்படும் வரை நாங்கள் தொடர்ந்தும் மீட்பு பணிகளை மேற்கொள்வோம்’, என்று மூத்த இராணுவ அதிகாரி ஜெனரல் டி.எஸ்.ஹூடா தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தி குறித்து மேலும்