பிஸ்டோரியஸ்சுக்கு எதிரான கொலை குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் தள்ளுபடி

ஆஸ்கர் பிஸ்டோரியஸ் படத்தின் காப்புரிமை Getty
Image caption ஆஸ்கர் பிஸ்டோரியஸ்

பாரா ஒலிம்பிக் ஒட்டப்பந்தயத்தில் பல சாதனைகளைப் புரிந்துள்ள தென் ஆப்பிரிக்காவின் ஆஸ்கர் பிஸ்டோரியஸ்சுக்கு எதிரான அனைத்துவகையான கொலைக்குற்றச்சாட்டுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். அதேசமயம் கொலைக்குற்ற வரம்பிற்குள் வராத மரணம் விளைவித்தார் என்கிற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு தண்டனை வழங்கப்படுமா என்பது நாளை வெள்ளிக்கிழமை தெரியலாம்.

கடந்த ஆண்டு (2013) காதலர் தினத்தன்று தனது வீட்டின் கழிப்பறையில் மூடப்பட்ட கதவுகளுக்கு பின்னிருந்த ரீவா ஸ்டின்கேம்பை, ஆஸ்கர் பிஸ்டோரியஸ் சுட்டுக் கொன்றதாக தொடரப்பட்ட வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தோகோசில் மசிபா, பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற ஒட்டப்பந்தய வீர்ர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ் வேண்டுமென்றே தனது பெண் நண்பரை சுட்டுக் கொன்றார் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி நிருபிப்பதற்கு அரசுதரப்புத் தவறிவிட்டதாக கூறியதும், முன் வரிசையில் உட்கார்ந்திருந்த பிஸ்டோரியஸின் கண்களில் நீர் கசிந்தது.

ஒட்டுமொத்தமாக வழக்கின் அரசு தரப்பு ஆதாரங்களைப் பார்க்கையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் கொலையுண்டவரைக் கொலைசெய்வதற்கான நோக்கத்தைக் கொண்டிருந்தார் என்றோ, அதற்கான திட்டம் வைத்திருந்தார் என்றோ காட்டவில்லை என்று தெரிவித்த நீதிபதி, திட்டமிட்டு ஒரு கொலையை குற்றம்சாட்டப்பட்டவர் செய்தார் என்பதை அரசதரப்பு நியாயமான சந்தேகத்துக்கு இடமின்றி நிருபிக்கத் தவறிவிட்டது என்றும் தீர்ப்பளித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption கொல்லப்பட்ட தனது சிநேகிதியுடன் பிஸ்டோரியஸ்

எனவே பிஸ்டோரியஸை நீதிமன்றம் அனைத்துக் கொலை குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்துள்ளது. வேண்டுமென்றே ரீட்டா ஸ்டின்கெம்பை சுட்டுக் கொல்லவில்லை என்று ஆரம்பத்திலிருந்தே பிஸ்டோரியஸ் கூறிவருகிறார். ஆனால் கொலைக்குற்ற வரம்பிற்குள் வராத மரணம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. இந்த வழக்கில் ஆரம்பத்தில் என்ன நடந்தது என்பது குறித்து தன் தரப்பை விளக்கிய பிஸ்டோரியஸ் குறுக்கு விசாரணையின் போது முழுமையாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

"பிஸ்டோரியஸ் பிடிகொடுக்காத சாட்சியாகவே நடந்துகொண்டார்"

வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் பிடிகொடுக்காத ஒரு சாட்சியமாகவே இருந்துள்ளார் என்று தெரிவித்த நீதிபதி இதற்குப்பல காரணங்கள் இருக்கலாம் என்று தாம் கருதுவதாகவும் கூறியிருக்கிறார். வழக்கு விசாரணையின் குறுக்கு விசாரணையின் போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளை அவர் உன்னிப்பாக கேட்கவில்லை என்றும், தம்மிடம் கேட்கப்பட்ட கேள்விகளைவிட அந்த கேள்விகளுக்குத் தான் சொல்லப்போகும் பதில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கவலையே அவரிடம் அதிகம் இருந்தது என்கிற ஒரு தோற்றமே ஏற்பட்டது என்றும் நீதிபதி தோகோசில் மசிபா தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption நீதிபதி தோகோசில் மசிபா

மேலும் சம்பவம் நடந்த இரவில், பிஸ்டோரியஸ் அவசர அவசரமாக செயல்பட்டுள்ளதாகவும் கூடுதல் பலத்தை பிரயோகம் செய்துள்ளதாகவும் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. பிஸ்டோரியஸ் அசட்டையாக செயல்பட்டுள்ளார் என்று கூறும் நீதிபதி நியாயமான மனிதன் இப்படி துப்பாக்கியால் நான்குமுறை சுட்டிருக்க மாட்டார் என்றும் கூறியுள்ளார்.

"சம்பவத்தின்போது பிஸ்டோரியஸ் நியாயமானவராக நடந்துகொள்ளவில்லை"

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருடைய சூழலில் இருக்கக்கூடிய நபர் நியாயமான ஒருவராக இருந்தால், மூடப்பட்ட கதவுக்குப் பின்னால் கழிப்பறையில் இருக்கும் ஒருவர் மீது நான்கு முறை சுட்டால் அவர் இறந்துபோவார் என்பதை எண்ணியிருப்பாரா என்பது முதல் கேள்வி; அப்படிப்பட்ட சூழலை தவிர்கத்தேவையான நடவடிக்கையை அந்த நபர் எடுத்திருப்பாரா என்பது இரண்டாவது கேள்வி. இந்த இரண்டு கேள்விகளுக்கும் தாம் கண்டிருக்கும் விடை ஆம் என்பதே என்று தெரிவித்த நீதிபதி, இறுதியாக அப்படிப்பட்ட சூழலில் எற்படக்கூடிய பின்விளைவுகளில் இருந்து தன்னை காத்துக் கொள்ள குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நபர் தவறிவிட்டாரா என்றால் அதற்கும் ஆம் என்பதுதான் தமது விடையாக இருக்கிறது என்றும், இந்த சம்பவத்தில் மரணத்தை தடுக்கத் தேவையான எந்த நடவடிக்கையையும் பிஸ்டோரியஸ் எடுக்கவில்லை என்றும் தீர்ப்பளித்திருக்கிறார்.

27 வயதான ஆஸ்கர் பிஸ்டோரியஸ் 2012 ஆம் ஆண்டு லண்டன் பாரா ஒலிம்பிக்சில் தங்கம் வென்றார். முழு உடல் திறன் கொண்டவர்கள் கலந்து கொள்ளும் ஒலிம்பிக் பந்தயத்தில் அவர் செயற்கைக் கால்களைப் பொறுத்திக் கொண்டு ஒடினார். கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று இவர், 29 வயது மாடலான தனது பெண் நண்பரை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கு விசாரணை இந்த ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் தேதி துவங்கியது. இந்த வழக்கின் விசாரணை உலகின் பல பகுதிகளில் தொலைக்காட்சி வழியாக நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty
Image caption பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர் பிஸ்டோரியஸ்

கொலைச்சம்பவம் நடந்ததற்கு முன்னர் மூன்று ஆண்டுகளாக பழகிவந்த ஆஸ்கர் பிஸ்டோரியஸும் ஸ்டின்கேம்பும் சண்டையிட்டுக் கொண்டதாக அரசு தரப்பு கூறிய குற்றச்சாட்டுக்களையும் பிஸ்டோரியஸ் மறுத்துள்ளார். ஸ்டின்கேம்ப் படுக்கை அறையில் இருந்ததாக தான் கருதியிருந்ததாகவும், தமது வீட்டின் கழிவறைக்குள் வெளியாள் ஊடுறுவி இருப்பதாக தான் கருதியதாலேயே துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் அவர் வாதிட்டார். இந்த சம்பவத்துக்குப் பிறகு பிஸ்டோரியஸ் மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும், ஆனால் கிரிமினல் குற்றத்துக்கு பொறுப்பேற்கச் செய்வதில் இருந்து விலக்களிக்கக் கூடிய எவ்வித மன நோயும் அவருக்கு இல்லை என்றும் மருத்துவர்கள் நீதிமன்றத்துக்கு ஜூலை மாதம் அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.