அமேஸான் காட்டில் பருவநிலை கண்காணிப்புக் கோபுரம்

Image caption வளிமண்டலத்திலிருந்து பல டன் பச்சில்ல வாயுக்களை அமேஸான் காடு உள்ளிழுத்துக்கொள்கிறது.

பருவநிலை மாற்றத்தைக் கண்காணிப்பதற்காக, அமேஸான் காட்டின் நடுவில் மிகப் பெரிய கண்காணிப்புக் கோபுரத்தைக் கட்டும் பணிகள் துவங்கியுள்ளன.

'தி அமேஸான் டால் டவர் ஆப்ஸர்வேட்டரி' என்ற இந்த கோபுரம் 325 மீட்டர் உயரம் கொண்டதாக இருக்கும்.

இதில் பொருத்தப்பட்டிருக்கும் கருவிகள், பச்சில்ல வாயுக்கள், காற்றில் இருக்கும் துகள்கள், பருவநிலை ஆகியவை குறித்த தகவல்களை சேகரிக்கும்.

பச்சில்ல வாயுக்கள் எங்கிருந்து உருவாகின்றன என்பதை மேலும் சிறப்பாகப் புரிந்துகொள்ளவும் பருவநிலை மாற்றம் குறித்த பல சந்தேகங்களுக்கு விடையளிக்கவும் இந்தத் தகவல்கள் பயன்படும் என இதில் ஈடுபட்டிருக்கும் பிரேசில், ஜெர்மன் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

முழுக்க முழுக்க இரும்பால் கட்டப்படும் இந்தக் கோபுரம், அமேஸான் காடுகளை ஒட்டி அமைந்திருக்கும் மனௌஸ் நகரத்திலிருந்து 170 கி.மீ. தூரத்தில் அமைகிறது. கோபுரத்தைக் கட்டுவதற்குத் தேவையான இரும்பு சாலை மூலமும் ஆற்றின் மூலமும் இந்த இடத்திற்குக் கொண்டுவரப்படுகிறது.

இந்தக் கோபுரத்தின் உயரம் காரணமாக, பல நூறு கிலோ மீட்டர் பரப்பு வனப்பகுதியில் உள்ள காற்று மண்டலத்தில் ஏற்படும் மாறுபாட்டை கண்காணிக்க முடியும்.

"தகவல்களைத் திரட்டும் இடத்தில் நேரடியான மனிதத் தாக்கம் இருக்காது. அதனால், வாயுமண்டலத்தில் இந்த வனப்பகுதியின் தாக்கம் குறித்து ஆராய்வதற்கு இது சிறந்த இடமாக இருக்கும்” என்கிறார் இந்தத் திட்டத்தில் ஜெர்மனியின் சார்பில் திட்ட ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஜர்ஜென் கெஸெல்மெயர்.

அமேஸான் காடுகள், நம் சூழலால் மிக எளிதில் பாதிக்கப்படக்கூடிய, சூழலில் எளிதில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு அமைப்பாகும். கார்பன் வாயு நம் வளிமண்டத்திலிருந்து உள்ளிழுக்கப்படுவதிலும் வெளியிடப்படுவதிலும் இந்தக் காடுகள் பெரும் தாக்கத்தைச் செலுத்துகின்றன.

இந்தக் கோபுரம் கட்டிமுடிக்கப்பட்ட பிறகு, இந்தப் பகுதியில் இருக்கும் பிற சிறிய கண்காணிப்புக் கோபுரங்களுடன் இந்தக் கோபுரம் ஒருங்கிணைக்கப்பட்டு, தகவல்கள் திரட்டப்படும்.

இந்தக் கோபுரம் கட்டி முடிக்கப்பட்டவுடன், மத்திய சைபீரியாவில் 2006ஆம் ஆண்டில் இதே போலக் கட்டப்பட்ட கோபுரத்துடன் இணைந்து தகவல்களைத் திரட்டும்.