ஐக்கிய ராஜ்ஜியம் முழுமைக்கும் அதிகாரப் பகிர்வு: பிரிட்டிஷ் பிரதமர்

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் படத்தின் காப்புரிமை AFP
Image caption பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன்

ஸ்காட்லாந்துக்கு மட்டுமன்றி, ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருக்கும் இங்கிலாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய எல்லா தரப்பாருக்கும் அதிகாரப் பகிர்வு செய்யப்படும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் உறுதியளித்திருக்கிறார்.

பிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்து தனியாக பிரிந்து போகக்கூடாது என்று பிரச்சாரம் செய்த பிரிட்டனின் மூன்று முக்கிய கட்சிகளான, ஆளும் கன்சர்வேடிவ் கட்சி, அதன் கூட்டாளியான லிபரல் டெமாக்ரெடிக் கட்சி மற்றும் பிரதான எதிர்கட்சியான லேபர் கட்சி ஆகிய மூன்றும் இணைந்து தமது பிரச்சாரத்தின்போது ஒரு உறுதிமொழியை ஸ்காட்லாந்து வாக்காளர்களுக்கு அளித்தனர்.

பிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்து பிரியக்கூடாது என்று அதிகப்படியான ஸ்காட்லாந்து வாக்காளர்கள் வாக்களித்தால் ஸ்காட்லாந்துக்கு மேலதிக அதிகாரங்களை பகிரந்தளிப்போம் என்று இந்த மூன்று கட்சியின் தலைவர்களும் கூட்டாக ஒரு உறுதிமொழியளித்திருந்தனர்.

தற்போது, ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து ஸ்காட்லாந்து பிரிந்து செல்ல வேண்டாம் என்று பெரும்பான்மை ஸ்காட்லாந்து வாக்காளர்கள் வாக்களித்திருக்கும் நிலையில், ஸ்காட்லாந்துக்கு மேலதிக அதிகாரங்கள் அளிப்போம் என்கிற பிரிட்டனின் மூன்று முக்கிய கட்சிகளும் அளித்திருந்த முந்தைய உறுதிமொழி நிறைவேற்றப்படும் என்று டேவிட் கேமரன் தெரிவித்திருக்கிறார். இந்த அதிகாரப்பகிர்வு என்பது ஸ்காட்லாந்துக்கு மட்டுமில்லாமல் பிரிட்டனின் எல்லா பகுதிக்கும் செய்யப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.