அமெரிக்கக் கூட்டு நாடுகளின் பிரஜைகளுக்கு ஐஎஸ் எச்சரிக்கை

படத்தின் காப்புரிமை AFP
Image caption அமெரிக்காவை தரைவழி யுத்தத்துக்கு இழுக்கப்போவதாகவும் ஐஎஸ் எச்சரிக்கை

இராக்கில் இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) ஆயுதக் குழுவின் நிலைகள் மீது அமெரிக்காவும் பிரான்ஸும் விமானத் தாக்குதல்களை நடத்தத்தொடங்கிய பின்னர், அந்த இயக்கத்தின் பேச்சாளர் ஒருவர் முதற்தடவையாக உரையொன்றை ஆற்றி வெளியிட்டுள்ளார்.

தமக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான அணியுடன் கூட்டுச் சேர்ந்துள்ள நாடுகளின் பிரஜைகள் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாகவும் ஐஎஸ் பேச்சாளர் அபு முஹமட் அல் அத்னானி அச்சுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா தரைவழிப் போர் ஒன்றுக்கு இழுக்கப்படும் என்றும் அதிபர் ஒபாமாவுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐஎஸ் இயக்கத்தினர் இராக்கிலும் சிரியாவிலும் கணிசமான அளவு நிலப்பகுதிகளை கைப்பற்றிவைத்துள்ளனர்.

அமெரிக்காவும் அதன் மேற்குல கூட்டாளி நாடுகளும் ஐஎஸ் இயக்கத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்காக, அரபுலக நாடுகளையும் உள்வாங்கிக் கொண்டு, பரந்துபட்ட சர்வதேச நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்காக முயன்றுவரும் வேளையில் இந்த உரை வெளியாகியுள்ளது.

அரபுமொழியில் பேசப்பட்ட இந்த உரைக்கு ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் ஹீப்ருவிலும் மொழிபெயர்ப்புக் குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.