ஆப்கன்: கேந்திர முக்கியமான பிராந்தியம் தாலிபன் வசம்

படத்தின் காப்புரிமை Reuters
Image caption இந்த மாதத்தின் ஆரம்பத்தில், காஸ்னியில் உள்ள பிராந்திய உளவுத்துறை வளாகம் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது

ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட ஒருவாரகாலமாக நடந்துவரும் மோதல்களின் தொடர்ச்சியாக, நேற்று வியாழக்கிழமை மாலை காஸ்னி மாகாணத்தில் உள்ள ஆஜ்ரெஸ்தான் வட்டாரத்தை தாலிபன் ஆயுததாரிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

ஆயுததாரிகள் கிராமங்களுக்குள் நுழைந்தபோது அவர்கள் கிட்டத்தட்ட 70 பேரை கொலைசெய்துள்ளதாக பிபிசியிடம் பேசிய உள்ளூர் அதிகாரிகள் கூறினர்.

'எதிரியுடன் இணைந்துசெயற்பட்டார்கள்' என்ற சந்தேகத்தில் பெண்கள் உட்பட 15 பேர் தலைவெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

காஸ்னிக்குள் நுழைந்துள்ள தாலிபன் போராளிகளில், பாகிஸ்தானைச் சேர்ந்த பஞ்சாபி இனத்தவர்களும் இருப்பதாக காஸ்னி வட்டாரத்திற்குப் பொறுப்பான பொலிஸ் தலைமை அதிகாரி ஸோர்வார் சாஹித் கூறினார்.

சுயாதீனமான தகவல்கள் இல்லாதபடியால் அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் குழப்பகரமான சூழ்நிலையே தொடர்கின்றது.

ஆஜ்ரெஸ்தான் வட்டாரத்தை பாதுகாப்புப் படையினர் மீளக்கைப்பற்றாவிட்டால், சூழவுள்ள சுமார் 100 கிராமங்கள் மோசமாகப் பாதிக்கப்படலாம் என்று உள்ளூர் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அடிக்கடி வன்முறை மோதல்கள் நடக்கும் காஸ்னி மாகாணம், தெற்கே கந்தஹாரையும் வடக்கே காபூலையும் கொண்டமைந்துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த யுத்தகளமாக உள்ளது.

ஆப்கானிஸ்தானின் புதிய அதிபர் அஷ்ரப் கானி பதவியேற்பதற்கு சில நாட்களே உள்ள நிலையில் ஆஜ்ரெஸ்தான் பிராந்தியம் தாலிபன் வசம் விழுந்துள்ளது.

2014-ம் ஆண்டின் முடிவுக்குள், நாட்டின் பாதுகாப்புக்கான பொறுப்பு உள்நாட்டுப் படைகளிடம் கையளிக்கப்பட்டு, வெளிநாட்டு தாக்குதல் படைகள் வெளியேறிவிடவுள்ளன.

அமெரிக்கா தலைமையிலான வெளிநாட்டுப் படைகளிடமிருந்து தாலிபனுக்கு எதிரான போரை ஆப்கன் இராணுவம் பெருமளவில் பொறுப்பேற்றுள்ள நிலையில், ஆப்கன் தேசிய இராணுவத்தில் ஆட்சேதங்கள் பெருமளவு அதிகரித்துவருகின்றன.

அடுத்துவரும் வாரங்களில், ஆப்கானிஸ்தான் அரசுடன் முக்கிய இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட எண்ணியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.