'மதுவுக்கு அடிமையானவர்களை மீட்க மாத்திரை'

படத்தின் காப்புரிமை THINKSTOCK

மதுவுக்கு அடிமையானவர்களை அந்தப் பிரச்சனையிலிருந்து மீட்பதற்கான ஒருவகை மாத்திரை தான் நல்மாஃபீன் (Nalmefene).

ஸ்காட்லாந்தில் மதுவுக்கு அடிமையான நோயாளிகளுக்கு அரச மருத்துவத் துறை இந்த மாத்திரையை வழங்குகின்றது.

இதனை, ஐக்கிய இராச்சியத்தின் ஏனைய பிராந்தியங்களான இங்கிலாந்திலும் வேல்ஸிலும் உள்ள நோயாளிகளுக்கும் வழங்க வேண்டும் என்று நைஸ் (NICE) என்கின்ற தேசிய சுகாதார பராமரிப்புக்கான நிறுவனம் அரசாங்கத்திடம் பரிந்துரை செய்துள்ளது.

ஒவ்வொன்றும் 3 பிரிட்டிஷ் பவுண்டுகளுக்கும் அதிக விலைகொண்ட இந்த மாத்திரையை சுமார் 6 லட்சம் நோயாளிகளுக்கு வழங்கவேண்டிவரும் என்று நைஸ் கணித்துள்ளது.

நல்மாஃபீன் அல்லது செலின்க்ரோ (Selincro) என்ற பெயர்களில் அழைக்கப்படும் இந்த மாத்திரையை ஒரு நாளைக்கு ஒன்று வீதம் எடுத்துக்கொண்டால் மது குடிக்கத் தூண்டுகின்ற உணர்வை குறைத்துக்கொள்ளமுடியும். உளநல ஆற்றுப்படுத்தலோடு (counselling) சேர்த்து இந்த மருந்தையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கணிப்பின்படி, ஆண் ஒருவர் நாள் ஒன்றுக்கு 7.5 யுனிட்டுகளும் (5 % ஆல்கஹால் கொண்ட பியரில் 3 பைண்டுகள்) பெண் ஒருவர் 5 யுனிட்டுகளும் (5 % ஆல்கஹால் கொண்ட பியரில் 2 பைண்டுகள்) மது அருந்த முடியும்.

அதற்கு மேல் அருந்துவதே அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இப்படியான பெருங்குடிகாரர்களுக்கே நல்மாஃபீன் மாத்திரையைக் கொடுத்து திருத்திவிடலாம் என்று நைஸ் அமைப்பு நம்புகின்றது.

ஆண்டுக்கு 21 பில்லியன் பவுண்டுகள் செலவு

Image caption 'பிரிட்டனில் 6 லட்சம் குடிகாரர்களுக்கு இந்த மாத்திரையை என்எச்எஸ் வழங்க நேரிடலாம்'

மதுவால் ஏற்படுகின்ற நோய்களால் என்எச்எஸ் என்ற அரச சுகாதாரத் துறைக்காகவும் மதுவோடு தொடர்புடைய சமூகப் பிரச்சனைகள், குற்றச்செயல்கள், பொருளாதார பாதிப்புகள் போன்ற காரணங்களுக்காகவும் பிரிட்டிஷ் அரசு ஆண்டுக்கு 21 பில்லியன் பவுண்டுகளை செலவு செய்கின்றது.

இந்த மாத்திரை மூலம், நோயாளிகள் தமது மது அடிமைத் தனத்திலிருந்து ஆறு மாத காலத்தில் 61 வீதமளவுக்கு மீண்டு வந்துள்ளதாக இதுவரை நடத்தப்பட்டுள்ள பரீட்சார்த்த சிகிச்சைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக மாத்திரையை தயாரிக்கும் நிறுவனம் (Lundbeck) கூறுகின்றது.

ஆனால், அளவோடு குடிக்கும் பழக்கம் உள்ளவர்களும் குடிப்பழக்கம் இல்லாதவர்களும் இந்த மாத்திரைத் திட்டத்தை நியாயமற்றது என்று வாதிடுகின்றனர்.

மது விற்பனைக்கான விளம்பரத்தை தடுப்பதும் மதுவுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயிப்பதும் குடிகாரர்களின் மனதை மாற்ற நல்லவழிகள் என்றும் பொது சுகாதாரத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

குடிப்பழக்கத்தை போக்க மாத்திரையா? அதுவும் பொறுப்பற்ற குடிகாரர்களின் பிரச்சனைக்கு பொது மக்களின் வரிப்பணமா?- போன்ற கேள்விகளும் இதனோடு எழுப்பப்பட்டுள்ளன.

எது எப்படி இருந்தாலும், குடிப்பழக்கத்தால் மிகமோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இது தான் தீர்வு என்று அரச மட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டால், இங்கிலாந்திலும் வேல்ஸிலும் பொது மருத்துவதுறை இந்த மாத்திரையை நோயாளிகளுக்கு வழங்கத் தொடங்கும்.

ஐக்கிய இராச்சியத்தின் இன்னொரு பிராந்தியமான வட அயர்லாந்தும் இதன் சாதக பாதகங்களை ஆராய்ந்துவிட்டு முடிவொன்றை எடுக்கும்.