கொபானேயில் கடுமையான சண்டை

கொபானேயில் கடுமையான சண்டை படத்தின் காப்புரிமை AFP
Image caption கொபானேயில் கடுமையான சண்டை

துருக்கிய எல்லைக்கு அருகே சிரியாவின் முற்றுகைக்கு உள்ளான நகரான கொபானேயை சுற்றவர உக்கிரமான துப்பாக்கிச் சண்டை நடக்கிறது.

இஸ்லாமிய அரசுத் தீவிரவாதிகளின் கடுமையான தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கு குர்து போராளிகள் முயற்சிக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான படைகளின் வான் தாக்குதல் நடக்கிறது.

சிரியாவின் குர்துக்கள் ஆயிரக்கணக்கில் நகரை விட்டு தப்பி ஓடிவிட்டார்கள்.

அந்தப் பகுதியில் வெடிச்சத்தங்களும், இயந்திரத் துப்பாக்கி ஓசையும் தொடர்ச்சியாக கேட்பதாக ஒரு பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

நகரின் கிழக்கு எல்லையில், வீடுகளுக்கு மேலாக பெரும் புகை மூட்டம் காணப்படுகின்றது.

இந்த வாரத்தில் இன்றுதான் மிகவும் உக்கிரமான சண்டை நடந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறுகிறார்.

கைதிகள் தப்பினர்

Image caption கொபானேயில் கடுமையான சண்டை

இதனிடையே, சிரியாவில் வடக்கு நகரான ஹஸ்ஸக்காவில் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளால் சிறை வைக்கப்பட்டிருந்த குறைந்தது 16 கைதிகள் தப்பிச்சென்றுள்ளதாக சிரியாவின் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

ஹஸ்ஸக்கா நகரின், தென் புறநகர்ப் பகுதியின் மீது, அமெரிக்கா தலைமையிலான விமானத் தாக்குதல்கள் நடந்த சந்தர்ப்பத்தில், யாரோ சிறைக்கதவுகளை திறந்துவிட்டுள்ளதாக தப்பிவந்த கைதிகளில் ஒருவர் சிரியாவின் மனித உரிமைகளைக் கண்காணிக்கும் குழுவிடம் கூறியுள்ளார்.

ஐஎஸ் ஆயுததாரிகளின் சடலங்கள் பல நிலத்தில் கிடப்பதைக் கண்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்தப் பகுதியில் குறைந்தது 30 போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. அவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டுப் பிரஜைகள்.