காஷ்மீரில் இரண்டாவது நாளாக இந்தியா-பாகிஸ்தான் மோதல்கள்

படத்தின் காப்புரிமை Reuters
Image caption காஷ்மீர் பகுதியில் இந்திய பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் வீடுகள் பாதிப்பு

இந்தியாவுக்குட்பட்ட காஷ்மீர் பகுதியில் இந்தியப் படையினருக்கும் பாகிஸ்தானிய படையினருக்கும் இடையே தொடர்ந்தும் இரண்டாவது நாளாக செவ்வாயன்றும் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

செவ்வாயன்றைய துப்பாக்கிச் சண்டையில் குறைந்தது 4 இந்தியர்களாவது படுகாயமடைந்துள்ளனர்.

திங்கள் இரவு முதல் தற்போது வரை இந்தியாவின் 40 எல்லைச் சாவடிகளின் மீதும் 25 கிராமங்களின் மீதும் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தியதாக இந்திய அதிகாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஞாயிறு இரவு இந்தியப் படையினருக்கும் பாகிஸ்தானிய படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இந்திய பகுதி கிராமங்களைச் சேர்ந்த 5 பேரும் பாகிஸ்தான் பகுதியைச் சேர்ந்த 4 பேருமாக 9 பொதுமக்கள் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

2003-ம் ஆண்டில் இருநாடுகளும் கைச்சாத்திட்ட மோதல் தவிர்ப்பு உடன்படிக்கையை மீறுகின்ற மிக மோசமான சம்பவங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

இரண்டு தரப்பிலுமுள்ள முஸ்லிம் கிராமங்கள் ஈத் பண்டிகையை கொண்டாடுகின்ற சந்தர்ப்பத்தில் இந்த மோதல்கள் வெடித்துள்ளன.

கோபமூட்டும் செயல்கள் எதிலும் தாம் ஈடுபடாத போதிலும், மற்ற தரப்பிலிருந்தே துப்பாக்கிப் பிரயோகம் தொடங்கப்பட்டதாக இரண்டு தரப்புகளும் மாறிமாறி பரஸ்பரம் குற்றம் சாட்டுகின்றன.

இதனிடையே பாகிஸ்தான் படையினரின் தாக்குதலில் காயமடைந்த பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்களை நலம் விசாரிக்க, அவர்கள் சிகிச்சைப் பெற்று வரும் ஜம்மு மருத்துவமனைக்கு சென்ற காஷ்மீர் மாநில முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, அங்கு செய்தியாளர்களிடம் பேசியபோது பாகிஸ்தானை விமர்சித்தார்.

காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் கவனத்தை பெற முடியாமல் தோல்வியடைந்த விரக்தியினால் தான், பாகிஸ்தான் இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாக ஒமர் அப்துல்லா விமர்சித்தார்.