ஆஸ்திரேலியாவுக்குள் தீவிரவாத பிரசாரகர்கள் வரத் தடை: டோனி அபாட்

படத்தின் காப்புரிமை AFP
Image caption தீவிரவாதப் பிரசாரகர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் வருவது தடை செய்யப்படும்-டோனி அபாட்

தீவிரவாத மற்றும் அந்நிய சித்தாந்தங்களைப் பரப்புபவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் வரத் தடை விதிக்கும் புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபாட் கூறுகிறார்.

சில தனி நபர்களை ஆய்வு செய்து, அடையாளம் கண்டு அவர்களுக்கு விசா மறுத்து அதன் மூலம் அவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் வருவதைத் தடுக்கும் , புதிய "சிவப்பு அட்டை திட்டம்" ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்று டோனி அபாட் கூறினார்.

பாதுகாப்பு மற்றும் குடிவரவுத் துறைகளிடையே மேம்பட்ட ஒருங்கிணைப்பு வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தற்போது ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன் பரிசீலனையில் இருக்கும் சட்டத்திருத்தங்களின்படி, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் குழுக்கள் தடை செய்யப்படும். ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீப வாரங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிரான சோதனை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

தீவிரவாத இஸ்லாமியக் குழுவான, ஹிஸ்ப் உத் டஹ்ரீர் என்ற அமைப்பு இராக்கிலும் சிரியாவிலும் அமெரிக்கா தலைமையிலான தாக்குதல்கள் பற்றி சிட்னியில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருக்கும் நிலையில் பிரதமர் டோனி அபாட்டின் இந்த கருத்துக்கள் வருகின்றன.