அமெரிக்க, ஆசிய கண்டங்களில் சந்திர கிரகணம்

படத்தின் காப்புரிமை Getty
Image caption அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் சந்திரனின் பின்னணியில் பறக்கும் விமானம்

இன்று, அமெரிக்க, ஆசியக் கண்டங்களின் பெரும்பகுதியில் தெரிந்த சந்திர கிரகணத்தை லட்சக் கணக்கானவர்கள் கண்டு மகிழ்ந்தனர்.

அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் க்ரீன்விச் நேரப்படி காலை 8 மணிக்கு சந்திர கிரகணம் துவங்கியது. ஆசியப் பகுதிகளில் க்ரீன்விச் நேரப்படி 10 மணி முதல் தெரிய ஆரம்பித்தது.

இந்தச் சந்திர கிரகணத்தின்போது, சந்திரன் முழுமையாக பூமியின் நிழலால் மறைக்கப்பட்டது. இந்த ஆண்டில் சந்திர கிரகணம் தோன்றுவது இது இரண்டாவது முறையாகும்.

படத்தின் காப்புரிமை AP
Image caption சூரிய ஒளி சிதறலால் செந்நிறத்தில் காட்சியளிக்கும் சந்திரன்.

சூரிய ஒளி சிதறுவதால், இன்று சந்திரன் ஆரஞ்சு நிறத்திலும் சிவப்பு நிறத்திலும் காட்சியளித்தது. இதனால், ரத்த நிலவு என்று பொருள்படும் “ப்ளட் மூன்” என அழைக்கப்பட்டது.

வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்காவின் மேற்குப் பகுதி, கிழக்காசியாவின் சில பகுதிகளில் சந்திர கிரகணத்தைப் பார்க்க முடிந்தது.

ஹாங்காங் விண்வெளி அருங்காட்சியகம் துறைமுகப் பகுதியில் சந்திர கிரகணத்தைப் பார்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

டோக்கியோ நகரில் சந்திர கிரகணத்தின்போது, யோகா பயிற்சிகளைச் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆஸ்திரேலியாவின் சிட்னி ஆப்சர்வேட்ரி சந்திர கிரகணத்தின் வீடியோ காட்சிகளை நேரலையாக வழங்கியது.

நியூ சவுத் வேல்ஸிலிருக்கும் ப்ளூ மவுண்டன்ஸ் குன்றுகளிலிருந்து சந்திர கிரகணத்தைப் பார்த்த ஆஸ்திரேலிய விண்வெளி ஆய்வாளரான ஜெஃப் சிம்ஸ், “ஆகாயம் முழுவதும் இருண்டுவிட்டதால், மற்றொரு பக்கத்தில் பால்வெளி மண்டலம் தெரிய ஆரம்பித்தது. மிக அரிய காட்சி அது” என்று தெரிவித்தார்.

சென்னையில் மாலை 5.54லிருந்து 6.04வரை சந்திர கிரகணம் தெரியும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சந்திர கிரகணத்தையொட்டி தமிழகத்தில் பல கோவில்களின் நடைகள் மூடப்பட்டிருந்தன.

இருந்தபோதும் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, பிரெசிலின் கிழக்குப் பகுதிகளில் சந்திர கிரகணம் தெரியவில்லை.

இதற்கு முந்தைய சந்திர கிரகணம் கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி தோன்றியது. அடுத்த சந்திர கிரகணம் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் நான்காம் தேதி ஏற்படும்.

அடுத்த ஆண்டும் சந்திர கிரகணம் இரண்டு முறை ஏற்படும்.