வியட்னாம் எண்ணெய்க் கப்பல் மாயம்

படத்தின் காப்புரிமை thanhnien
Image caption காணாமல் போன இந்த சன்ரைஸ் - 689 கப்பலில் 5,226 டன் எண்ணெய் இருந்தது.

வியட்னாமைச் சேர்ந்த எண்ணெய்க் கப்பல் ஒன்று சிங்கப்பூரிலிருந்து வியட்னாமிற்குச் செல்லும் வழியில் காணாமல் போயுள்ளது. கடற்கொள்ளையர்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சன்ரைஸ் - 689 என்று பெயரிடப்பட்டிருந்த அந்தக் கப்பலில் 5,226 டன் எண்ணெயும் 18 ஊழியர்களும் இருந்தனர். கடந்த வியாழக்கிழமையன்று இந்தக் கப்பல் காணாமல் போனது.

வியட்னாமின் க்வாங் ட்ரி மாகாணத்திற்கு ஞாயிற்றுக்கிழமையன்றே அந்தக் கப்பல் வந்தடைந்திருக்க வேண்டும்.

அந்தக் கப்பலைத் கண்டுபிடிக்கும் பணியில் தங்களுக்கு உதவும்படி மலேசியா, இந்தோனேஷியா, சிங்கப்பூர் அதிகாரிகளை வியட்னாம் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சிங்கப்பூரிலிருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் அந்தக் கப்பல் காணாமல் போனது. இதையடுத்து கப்பலைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

கடற்கொள்ளையர்கள் கப்பலைப் பிடித்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

“அதிகாரபூர்வமாக இது குறித்து எந்த முடிவுக்கும் வரவில்லை. தொழில்நுட்பக் கோளாறுகள், காலநிலை காரணமாக கப்பல் காணாமல் போயிருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. கடற்கொள்ளையர்கள் கப்பலைத் தாக்கினார்களா என்பது பற்றி எங்கள் தேடுதல் பிரிவுகள் உறுதிப்படுத்த முயன்றுவருகின்றன” என வியட்னாமின் கடலோரக் காவல்படையின் துணைத் தளபதி கர்னல் என்கோ என்கோக் தூ பிபிசியிடம் தெரிவித்தார்.

மலாக்கா நீரிணையில் மலேசியா, இந்தோனேஷியா, சிங்கப்பூருக்கு இடைப்பட்ட பகுதிகளில் பல கப்பல்கள் இந்த ஆண்டு கடத்தப்பட்டிருக்கின்றன.

தெற்காசிய கடல் பகுதியில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் குறைந்தது 6 எண்ணெய்க் கப்பல்களாவது அதிலிருக்கும் எண்ணெய்க்காக கடத்தப்பட்டிருப்பதாக சர்வதேச கடல்சார் வாரியத்தின் பைரசி ரிப்போர்ட்டிங் சென்டர் தெரிவித்துள்ளது.

சோமாலிய கடற் பகுதியில் நிகழும் கடற்கொள்ளைகளைத் தடுப்பதில் சமீபகாலமாக உலக நாடுகள் கவனம் செலுத்திவந்த நிலையில், தெற்காசிய கடல் பகுதியில் கடற்கொள்ளை அதிகரித்துள்ளது. உலகின் வர்த்தகத்தில் 3ல் ஒரு பகுதி இந்த வழியாகத்தான் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.