பிரிட்டன்: யூகிப் கட்சி முதலாவது நாடாளுமன்ற ஆசனத்தை வென்றது

படத்தின் காப்புரிமை d
Image caption யூகிப் கட்சியின் முன்னேற்றம் பிரிட்டனின் இரண்டு பெரிய கட்சிகளுக்கும் 'தலையிடி'

பிரிட்டனில் யூகிப் அல்லது ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி (UK Independence party) முதலாவது நாடாளுமன்ற ஆசனத்தை வென்றுள்ளது.

ஆளும் கன்செர்வேடிவ் ( பழமைவாதக் கட்சி) கட்சியிலிருந்து கடந்த ஆகஸ்டில் பிரிந்துசென்றிருந்த டக்ளஸ் கார்ஸ்வெல் பெருவெற்றி பெற்று எஸெக்ஸிலுள்ள கிளாக்டன் தொகுதியை மீளக் கைப்பற்றியுள்ளார். கிளாக்டன் இடைத் தேர்தலில், டக்ளஸ் கார்ஸ்வெல் 60 வீதமான வாக்குகளை வென்றுள்ளார்.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகவேண்டும் என்றும் வெளிநாட்டுக் குடியேறிகளின் வருகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் யூகிப் கட்சி கோரிவருகின்றது.

யூகிப் கட்சியின் வெற்றி, பிரிட்டனின் இரண்டு பெரிய கட்சிகளுக்கும் 'பெரும் தலையிடி' என்று வர்ணித்துள்ள பிபிசியின் அரசியல் விவகார செய்தியாளர், இந்தக் கட்சி பிரிட்டிஷ் அரசியலில் நம்பகமான சக்தியாக தன்னைக் கூறிக்கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.

வடமேற்கு இங்கிலாந்திலுள்ள ஹேய்வூட் மற்றும் மிடில்டன் தொகுதியிலும் ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி மிகவும் நெருக்கமான- இரண்டாவது இடத்தை வென்றுள்ளது.

எதிர்க்கட்சியான தொழிற்கட்சி, குறுகிய வாக்கு வித்தியாசத்துடன் இந்தத் தொகுதியை தக்கவைத்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.