அமெரிக்க மருத்துவமனையில் ஒருவருக்கு எபோலா தொற்று

படத்தின் காப்புரிமை AP
Image caption எபோலா நோயாளியை பராமரித்த சுகாதாரப் பணியாளருக்கே நோய் தொற்றியுள்ளது (படம்: உயிரிழந்த எபோலா நோயாளி தாமஸ் டன்கன்)

அமெரிக்காவில் எபோலா நோயாளி ஒருவரை பராமரித்துவந்த சுகாதாரப் பணியாளர் ஒருவருக்கும் எபோலா வைரஸ் தொற்றியுள்ளது.

பெயர் குறிப்பிடப்படாத இந்தப் பெண்ணிடம் தொடர்ந்தும் பரிசோதனைகள் நடத்தப்படும் என்று டெக்ஸாஸ் மாநில அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த சுகாதாரப் பணியாளர் பராமரித்துவந்த தாமஸ் டன்கன், லைபீரியாவிலிருந்து வந்திருந்த நிலையில் கடந்த புதனன்று உயிரிழந்தார்.

அமெரிக்காவில் எபோலா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்ட முதலாவது நபர் அவர்தான்.

இப்போது கண்டறியப்பட்டுள்ள இந்த சுகாதாரப் பணியாளர் தான், மேற்கு ஆபிரிக்காவுக்கு வெளியே இந்த நோய் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு தொற்றியுள்ளமைக்கான இரண்டாவது உதாரணமாக உள்ளார்.

எபோலா தொற்றுக்குள்ளான ஸ்பெயினைச் சேர்ந்த மருத்துவத் தாதி ஒருவர் தற்போது தேறிவருகின்றார்.

மேற்கு ஆபிரிக்காவில் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட எபோலா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் பெரும்பாலும் சியேராலியோன், லைபீரியா மற்றும் கினி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.